அமீரக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு


அமீரக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2021 11:49 PM GMT (Updated: 8 Jan 2021 11:49 PM GMT)

அமீரக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

அபுதாபி,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஐக்கிய அரபு அமீரக அணியின் துணை கேப்டன் சிராக் சுரி, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் லக்ரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதனால் ஒரு நாள் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் கிளம்பியது. ஆனால் திட்டமிட்டபடி முதலாவது ஒரு நாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங் அடித்த சதத்தின் (131 ரன்) உதவியுடன் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் கண்ட ஐக்கிய அரபு அமீரக அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சுன்டங்காபோயில் ரிஸ்வான் (109 ரன்), முகமது உஸ்மான் (105 ரன்) தங்களது முதலாவது சதத்தை ருசித்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story