3வது டெஸ்ட் போட்டி: உணவு இடைவேளை வரை இந்திய அணி 180/4 (79 ஓவர்கள்)


3வது டெஸ்ட் போட்டி:  உணவு இடைவேளை வரை இந்திய அணி 180/4 (79 ஓவர்கள்)
x
தினத்தந்தி 9 Jan 2021 2:22 AM GMT (Updated: 9 Jan 2021 2:22 AM GMT)

3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 79 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னி, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மா, நவ்தீப் சைனி இடம் பிடித்தனர்.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

எனினும், வார்னர் 5 ரன்களில் வெளியேறினார்.  அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். ஆஸ்திரேலியா 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதுடன் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

அணியின் ஸ்கோர் 106 ரன்களாக உயர்ந்த போது, புகோவ்ஸ்கி 62 ரன்களில் (110 பந்து, 4 பவுண்டரி) நவ்தீப் சைனியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.  இதன்பின்னர் ஸ்மித் இறங்கினார்.  அணிக்கு லபுஸ்சேன் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் கைகொடுத்தது.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. லபுஸ்சேன் 67 ரன்களுடனும் (149 பந்து, 8 பவுண்டரி), சுமித் 31 ரன்களுடனும் (64 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இதன்பின்பு நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.  இதில், லபுஸ்சேன் 91 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்து வீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து சதம் எடுக்க தவறினார்.

இதற்கு அடுத்து விளையாடிய வேட் 13 ரன்களும், கிரீன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.  84.5 ஓவர்கள் வீசப்பட்டபொழுது 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 249 ரன்களை எடுத்திருந்தது.  ஸ்மித் 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.  இதனையடுத்து உணவு இடைவேளை விடப்பட்டது.

இதன்பின்பு மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், அதிரடி காட்டிய ஸ்மித் 131 ரன்கள் குவித்து அணிக்கு வலு சேர்த்துள்ளார்.  எனினும் அவரை ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

அடுத்து விளையாடிய பெய்னி (1), கம்மின்ஸ் (0), ஸ்டார்க் (24), லயான் (0) ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர்.  ஹேசில்வுட் (1) ரன் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.  105.4 ஓவர்களில் அந்த அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடினர்.  இந்த போட்டியில் 16வது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்சர் அவருக்கு வரலாறு படைக்க உதவியது.

சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.  இதன்பின், ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோகித் 26 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து விளையாடிய கில் (50) அரைசதம் எடுத்த நிலையில், கம்மின்ஸ் பந்து வீச்சில் கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  இந்திய அணியில் புஜாரா (9) மற்றும் ரகானே (5) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.  இதில், ரஹானே 22 ரன்கள் (70 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தபொழுது, கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டானார்.

தொடர்ந்து வந்த விஹாரி 38 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.  பின்பு புஜாராவுடன், பண்ட் கைகொடுத்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டு உள்ளது.  இதுவரை வீசப்பட்ட 79 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து உள்ளது.  புஜாரா 42, பண்ட் 29 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.  இந்திய அணி 45.5வது ஓவரில் 100 ரன்களும், 69.3வது ஓவரில் 150 ரன்களும் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

Next Story