ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர்


ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர்
x
தினத்தந்தி 22 Jan 2021 1:19 AM GMT (Updated: 22 Jan 2021 1:19 AM GMT)

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றி அசத்தியது. அதிலும் ஆஸ்திரேலியாவின் வெற்றி கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் அரங்கேறிய கடைசி டெஸ்டில் இந்தியா 328 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அத்துடன் பிரிஸ்பேனில் வாகை சூடிய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திரம் படைத்த அஜிங்யா ரஹானே தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பிரிஸ்பேனில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக தாயகம் திரும்பினர். பொறுப்பு கேப்டன் ரஹானே, துணை கேப்டன் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் காலை மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மும்பை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்திலேயே ரஹானே கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார். கொரோனா தடுப்பு நடைமுறையின்படி வெளிநாட்டில் இருந்து வந்துள்ள வீரர்கள் கட்டாயம் தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், இதில் விதி விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சாஹல் கூறியுள்ளார். சில தினங்கள் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு இங்கிலாந்து தொடருக்காக அவர்கள் அடுத்த வாரம் சென்னை வர உள்ளனர். பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்கள் விளாசி ஹீரோவாக ஜொலித்த ரிஷாப் பண்ட் டெல்லி சென்றடைந்தார். சென்னையைச் சேர்ந்த அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் துபாயில் உள்ளனர். அவர்கள் இன்று காலை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பெங்களூரு வந்தடைந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்த போது அவரது தந்தை முகமது கோஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் பாதுகாப்பு வளையத்தில் இணைந்திருந்ததால் அவரால் இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி தனது தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறி முகமது சிராஜ் நெகிழ்ந்தார்.

தெலுங்கானா ஷம்ஷாபத் விமான நிலையம் வந்திறங்கிய அவர் அங்கிருந்து நேராக தனது தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட காயர்தாபாத் சுடுகாட்டுக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருந்த அவர் பின்னர் வீடு திரும்பியதும் தாயாருக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த முகமது சிராஜ், ஆஸ்திரேலிய தொடரில் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டையும் மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கமுடன் கூறினார்.

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டின் போது முகமது சிராஜை மைதானத்தில் இருந்த சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் குரங்குடன் ஒப்பிட்டு இனவெறியுடன் திட்டினர். இந்த சம்பவம் பற்றி சிராஜிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலியாவில் இனவெறி அவமானத்தை சந்தித்தேன். உடனே கேப்டன் மூலம் நடுவர்களிடம் முறையிட்டேன். நடுவர்கள் எங்களுக்கு போட்டியில் இருந்து பாதியில் வெளியேறும் வாய்ப்பை வழங்கினர். ஆனால் கேப்டன் ரஹானே, நாங்கள் போட்டியில்இருந்து விலக மாட்டோம். நாங்கள் தவறு செய்யவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடுவோம் என்று கூறினார். ரசிகர்களின் வசைமொழி என்னை மனதளவில் வலுப்படுத்தியது. அதனால் எனது ஆட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன்’ என்றார்.

Next Story