‘விராட்கோலி விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்பது தெரியவில்லை’ - மொயீன் அலி கவலை


‘விராட்கோலி விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்பது தெரியவில்லை’ - மொயீன் அலி கவலை
x
தினத்தந்தி 31 Jan 2021 11:19 PM GMT (Updated: 1 Feb 2021 2:02 AM GMT)

‘விராட்கோலியின் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்பது தெரியவில்லை’ என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்தார்.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முறையே வருகிற 5 மற்றும் 13-ந் தேதி தொடங்குகிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் முறையே வருகிற 24 மற்றும் மார்ச் 4-ந் தேதி ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து 20 ஓவர் போட்டி தொடர் ஆமதாபாத்திலும், ஒருநாள் போட்டி தொடர் புனேயிலும் அரங்கேறுகிறது.

டெஸ்ட் போட்டி தொடருக்கான இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து நட்சத்திர ஓட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகின்றனர். தனிமைப்படுத்துதல் முடிந்து இரு அணி வீரர்களும் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள 33 வயதான ஆல்-ரவுண்டர் மொயீன் அலி இதுவரை 60 டெஸ்ட் போட்டியில் விளையாடி 5 சதம், 14 அரைசதம் உள்பட 2,782 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் 181 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக சமீபத்தில் நடந்த இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடாத மொயீன் அலி தனது அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சு மூலம் இந்த தொடரில் தாக்கம் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மொயீன் அலி நேற்று காணொலி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி அற்புதமான வீரர். உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு அவரது உத்வேகம் நிச்சயம் அதிகரித்து இருக்கும். விராட்கோலி விக்கெட்டை நாங்கள் எப்படி வீழ்த்த போகிறோம் என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவரது பேட்டிங் நுணுக்கத்தில் எந்தவித பலவீனமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் எங்களிடம் திறமை வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள்.

விராட்கோலி சிறப்பான மனிதர். அவர் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் கிரிக்கெட் குறித்து அதிகம் பேசமாட்டோம். டெஸ்ட் போட்டியில் ஆடுவது பெரிய உத்வேகமாகும். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது அடுத்த விஷயம். ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கும் நான் இந்த போட்டி தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன். என்னால் இன்னும் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதுடன், அணிக்கு வெற்றி தேடிக் கொடுக்கும் வகையில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று உணருகிறேன். நான் சிறிய இலக்குகள் வைத்து இருக்கிறேன். அந்த இலக்கை முதலில் எட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் நான் 200 விக்கெட்டுகளை எட்டுவதற்கு அதிக தூரம் இல்லை. அதனை அடைந்த பிறகு அடுத்த இலக்கு நிர்ணயித்து செயல்படுவேன்.

2019-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த லீக் ஆட்டங்களில் விளையாடினேன். அந்த சமயத்தில் கிடைத்த இடைவேளையை அனுபவித்தாலும், டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போனது வருத்தம் அளித்தது. டெஸ்ட் போட்டியில் ஆடுவதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் உயர்ந்த நிலையை எட்ட முடியும். டெஸ்ட் போட்டியில் தான் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிக நேரம் ஈடுபட முடியும். குறுகிய வடிவிலான (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) போட்டியில் ஆடுவதால் மட்டும் நல்ல நிலையை எட்ட முடியும் என்று நான் நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களால் குறுகிய வடிவிலான போட்டியிலும் சிறந்து விளங்க முடியும். டெஸ்ட் போட்டியில் நன்றாக செயல்படும் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 20 ஓவர் போட்டியில் உலகின் சிறந்த வீரர்களாக விளங்குவதில் ஆச்சரியமில்லை. எல்லா வடிவிலான போட்டியிலும் ஆடுகையில் நான் குறுகிய வடிவிலான போட்டிகளில் நன்றாக செயல்பட்டதாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story