‘களத்தில் துணை கேப்டனாக கோலிக்கு உதவுவேன்’ - ரஹானே பேட்டி


‘களத்தில் துணை கேப்டனாக கோலிக்கு உதவுவேன்’ - ரஹானே பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2021 12:24 AM GMT (Updated: 4 Feb 2021 12:24 AM GMT)

களத்தில் இனி துணை கேப்டன் என்ற வகையில் விராட் கோலிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி உதவுவேன் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். உள்நாட்டில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி அந்த ஆதிக்கத்தை தொடரும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது. தொடர் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே காணொலி வாயிலாக நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலிய தொடரின் போது குடும்ப விஷயமாக ேகப்டன் விராட் கோலி பாதியிலேயே தாயகம் திரும்பியதால் எஞ்சிய போட்டிகளுக்கு நான் கேப்டனாக செயல்பட்டேன். இப்போது அவர் கேப்டன், நான் துணை கேப்டன். அவருக்கு பின்னால் இருந்து உதவுவது தான் எனது பணி. கோலி இருக்கும் போது எனது பணி உண்மையிலேயே மிகவும் எளிது. போட்டியின் போது விராட் கோலி எதை பற்றியாவது என்னிடம் கேட்டால், அதற்குரிய ஆலோசனையை சொல்வேன்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் அது முடிந்து போன விஷயம். தற்போது ஒரு அணியாக நடப்பு தொடரில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்து அணி மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறோம். அவர்கள் சமீபத்தில் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறார்கள். சிறந்த அணியான அவர்களை நாங்கள் எந்த வகையிலும் குறைவாக எடுத்துக் கொள்ளமாட்டோம். இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு எங்களது பலத்துக்கு ஏற்ப விளையாடியாக வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 4-5 மாதங்கள் உள்ளன. எனவே அது பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. தற்போது சென்னை போட்டி மீது முழு கவனம் இருக்க வேண்டும். நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி இருக்கிறது. அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதியான அணி. எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமாக கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்்ஷர் பட்டேல் அறிமுக வீரராக களம் இறங்குவாரா? என்று கேட்கிறீர்கள். நாளைய (இன்று) பயிற்சிக்கு பிறகு ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம். இந்திய ஆடுகளங்கள் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும். சென்னை ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். எங்களது பலத்துக்கு தக்கபடி அணியை தேர்வு செய்வோம்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

Next Story