இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் இன்று விற்பனை


இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் இன்று விற்பனை
x
தினத்தந்தி 8 Feb 2021 12:01 AM GMT (Updated: 8 Feb 2021 12:01 AM GMT)

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் இந்த டெஸ்ட் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வெளிப்புற போட்டிகளுக்கு 50 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 13-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கிறது. கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உள்ளதால் தேவையில்லாத கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த முறை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை.

ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி www.paytm.com மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்திலோ அல்லது பேடியம், இன்சைடர் செயலி மூலமோ இன்று காலை 10 மணி முதல் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

தினசரி டிக்கெட்டுகளான சி, டி, இ (லோயர்) ஆகிய கேலரிகளின் டிக்கெட் விலை ரூ.100 ஆகும். டி, இ (அப்பர்) பிரிவு டிக்கெட் ரூ.150, எப், எச், ஐ, ஜே,கே (லோயர்) டிக்கெட் ரூ.150, ஐ, ஜே, கே, (அப்பர்) டிக்கெட் ரூ.200 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது.

ஆனலைன் மூலம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்குரிய அசல் டிக்கெட்டை வருகிற 11-ந்தேதி காலை 10 மணி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் கவுன்ட்டர் எண் 3-ல் வாங்கிக்கொள்ளலாம். இதற்காக வருகை தரும் ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட போது, விதிமீறல் பிரச்சினை காரணமாக ஐ,ஜே, கே, (12 ஆயிரம் இருக்கை வசதி) ஆகிய மூன்று கேலரிகள் மட்டும் திறக்க அனுமதிமறுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில் அது திறக்கப்பட்டது. இந்த மூன்று கேலரிகளும் 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இ்ந்த சர்வதேச டெஸ்ட் போட்டியின் மூலம் ரசிகர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

Next Story