கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித், அஸ்வின் முன்னேற்றம் - ஜோ ரூட், பென் ஸ்டோக்சுக்கு பின்னடைவு + "||" + Rohit, Aswin improve in Test cricket rankings - Joe Root, Ben Stokes fall behind

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித், அஸ்வின் முன்னேற்றம் - ஜோ ரூட், பென் ஸ்டோக்சுக்கு பின்னடைவு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித், அஸ்வின் முன்னேற்றம் - ஜோ ரூட், பென் ஸ்டோக்சுக்கு பின்னடைவு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித், அஸ்வின் முன்னேற்றமடைந்துள்ளனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்சுக்கு பின்னடைவு.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரிவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப்-2 இடங்களில் கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) நீடிக்கிறார்கள். சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சோபிக்க தவறிய (6 மற்றும் 33 ரன்) இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி மாற்றமின்றி 5-வது இடத்தில் நீடிக்கிறார். புஜாரா ஒரு இடம் இறங்கி 8-வது இடத்தில் இருக்கிறார். சென்னை டெஸ்டில் 161 ரன்கள் குவித்து அசத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 9 இடங்கள் எகிறி 14-வது இடத்தையும், இதே டெஸ்டில் அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 2 இடம் முன்னேறி தனது சிறந்த நிலையாக 11-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சதம் விளாசிய இந்திய வீரர் அஸ்வின் 14 இடங்கள் ஏற்றம் கண்டு 81-வது இடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ ஆக தொடருகிறார். இந்திய தரப்பில் அஸ்வின் (7-வது இடம்), பும்ரா (8-வது இடம்) ஆகியோரது வரிசையில் மாற்றமில்லை. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 இடம் சறுக்கி 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 68-வது இடத்துடன் தனது தரவரிசை பயணத்தை தொடங்கியுள்ளார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், சென்னை டெஸ்டில் சொதப்பியதால் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடத்துக்கும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதத்துடன், மொத்தம் 8 விக்கெட் எடுத்து ஹீரோவாக ஜொலித்த தமிழகத்தின் அஸ்வின் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: வில்லியம்சன் மீண்டும் ‘நம்பர் ஒன்’
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.