கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: - நியூசிலாந்து அணி அபார வெற்றி + "||" + 20 over cricket against Australia: New Zealand win by a huge margin

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: - நியூசிலாந்து அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: - நியூசிலாந்து அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
கிறைஸ்ட்சர்ச்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 4 ஓவர்களில் 19 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மார்ட்டின் கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும், டிம் செய்பெர்ட் 1 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது வீரராக களம் கண்ட டேவோன் கான்வே அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினார். அவர் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து அசத்தினார். அவருடன் இணைந்த கிளைன் பிலிப்ஸ் (30 ரன்கள், 20 பந்து, 3 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் (26 ரன்கள், 15 பந்து, 3 பவுண்டரி) ஆகியோர் வேகமாக ரன் சேர்த்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று மட்டையை சுழற்றிய டேவோன் கான்வே 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும்.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. டேவோன் கான்வே 59 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 99 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மயிரிழையில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட டேவோன் கான்வே சர்வதேச 20 ஓவர் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், ஜய் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. அந்த அணி 4.2 ஓவர்களில் 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.

இந்த சரிவிில் இருந்து கடைசி வரை அந்த அணியால் மீள முடியவில்லை. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி கட்ட விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் காலி செய்தனர்.

17.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 131 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 45 ரன்னும், ஆஷ்டன் அகர் 23 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 1 ரன்னிலும், அறிமுக வீரர் ஜோஷ் பிலிப் 2 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். நியூசிலாந்து தரப்பில் சோதி 4 விக்கெட்டும், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும், கைல் ஜாமிசன், மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டுனெடினில் நாளை மறுநாள் (இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு) நடக்கிறது.