சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு: கவாஸ்கருக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு


சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு: கவாஸ்கருக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு
x
தினத்தந்தி 7 March 2021 12:34 AM GMT (Updated: 7 March 2021 12:34 AM GMT)

கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஆமதாபாத், 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.

71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Next Story