ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் வீரர் ஷாகிடி இரட்டை சதம் அடித்து சாதனை


ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் வீரர் ஷாகிடி இரட்டை சதம் அடித்து சாதனை
x
தினத்தந்தி 12 March 2021 4:08 AM GMT (Updated: 12 March 2021 4:08 AM GMT)

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

அபுதாபி, 

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ஹஸ்மத்துல்லா ஷாகிடி 86 ரன்களுடனும், கேப்டன் அஸ்ஹார் ஆப்கான் 106 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 2-வது நாளான நேற்றும் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். அஸ்ஹார் ஆப்கான் 164 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய 26 வயதான ஹஸ்மத்துல்லா ஷாகிடி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் இரட்டை சதம் நொறுக்கிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அவர் இரட்டை சதத்தை எட்டியதும் ஆப்கானிஸ்தான் இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டெஸ்டில் ஆப்கானிஸ்தான் இதற்கு முன்பு 400 ரன்களை கூட தாண்டியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகிடி 200 ரன்களுடனும் (443 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்), நசிர் ஜமால் 55 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது.


Next Story