கிரிக்கெட்

ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆட விரும்புகிறேன் - இந்திய கேப்டன் கோலி பேட்டி + "||" + I want to play as a starter with Rohit Sharma - Interview with India captain Kohli

ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆட விரும்புகிறேன் - இந்திய கேப்டன் கோலி பேட்டி

ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆட விரும்புகிறேன் - இந்திய கேப்டன் கோலி பேட்டி
20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் காண விரும்புவதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.
ஆமதாபாத், 

ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி (80 ரன்), துணை கேப்டன் ரோகித் சர்மா (64 ரன்) ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் இந்திய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய எட்டு 20 ஓவர் தொடர்களை இழக்காமல் வீறுநடை போட்டு வந்தது. அவர்களின் வெற்றிநடைக்கு இந்திய படையினர் முட்டுக்கட்டை போட்டனர்.

5 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதம் உள்பட 231 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 20 ஓவர் தொடரில் அவர் தொடர்நாயகன் விருது பெறுவது இது 7-வது முறையாகும். வேறு எந்த வீரரும் 5 முறை கூட தொடர்நாயகன் விருதை பெற்றதில்லை. அத்துடன் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

லோகேஷ் ராகுல் தொடர்ந்து சொதப்பியதால் கடைசி ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டார். இதனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக நுழைந்த கேப்டன் கோலி ரன்வேட்டையில் முத்திரை பதித்தார். இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் யுக்தியை கோலி கையில் எடுத்துள்ளார். அவர் அவ்வாறு செய்தால் இளம் வீரர் இஷான் கிஷன், லோகேஷ் ராகுலின் வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

வெற்றிக்கு பிறகு விராட் கோலி கூறியதாவது:-

இது எங்களுக்கு நிறைவான ஒரு ஆட்டமாக அமைந்தது. எதிரணியை முழுமையாக தோற்கடித்து விட்டோம். இரவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிக அளவில் இருந்தபோதிலும் கூட கடந்த ஆட்டத்தை போன்றே இலக்கை நிர்ணயித்து மீண்டும் இங்கிலாந்தை மடக்கி இருக்கிறோம். இந்த ஆட்டத்தில் ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் 224 ரன்கள் குவித்து இருக்கிறோம். இது எங்களின் பேட்டிங் வலிமைக்கு சான்று. ரோகித் சர்மாவின் பேட்டிங் அருமையாக இருந்தது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவின் செயல்பாடு எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.

அடுத்து வரும் ஐ.பி.எல். தொடரிலும் தொடக்க ஆட்டக்காரராக (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி) இறங்கப்போகிறேன். கடந்த காலங்களில் பேட்டிங்கில் நான் வெவ்வேறு வரிசைகளில் விளையாடி இருக்கிறேன். தற்போது இந்திய அணியின் பேட்டிங்கில் மிடில் வரிசை மிகவும் நிலையானதாக இருப்பதாக உணர்கிறேன். அதனால் இப்போது அணியின் மிகச்சிறந்த இரண்டு வீரர்கள் (கோலி-ரோகித்) 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொள்வது தான் பலமாக இருக்கும். எனவே ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாட விரும்புகிறேன். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் அழுத்தமாக காலூன்றி விட்டால், எங்களில் ஒருவர் நிச்சயம் எதிரணியை நிலைகுலையச் செய்துவிடுவோம். அதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். அது மட்டுமின்றி எங்களில் ஒருவர் தொடர்ந்து களத்தில் நிற்கும் போது, பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். இன்னும் சுதந்திரமாக விளையாடலாம் என்று அவர்கள் உணர்வார்கள். இது அணிக்கும் நல்ல விஷயமாகும். 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை இதையே (தொடக்க வீரர்) தொடரலாம் என்று நினைக்கிறேன்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நாங்கள் சில சர்வதேச ஆட்டங்களில் விளையாடலாம். என்றாலும் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்-யார் ? என்பதை ஏறக்குறைய அடையாளம் கண்டுவிட்டோம். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். அச்சமின்றி விளையாடி அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம் என்று கோலி கூறினார்.

ரோகித் சொல்வது என்ன?

இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்குள் பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. அணிக்கு எது கச்சிதமாக இருக்கும் என்பதை அலசி ஆராய்ந்து முடிவு செய்வோம். இந்த ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் தேவை என்று கருதியதால் ஒரு பேட்ஸ்மேனை விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக லோகேஷ் ராகுலை நீக்க வேண்டியதாயிற்று. குறுகிய வடிவிலான போட்டிகளில் எங்களது பிரதான வீரர்களில் ராகுலும் ஒருவர். வீரர்களின் தற்போதைய பார்மை வைத்து தான் அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணியை முடிவு செய்கிறது. இந்த நீக்கத்தின் மூலம் ராகுலின் பெயர் இனி பரிசீலிக்கப்படாது என்ற அர்த்தம் கிடையாது. குறிப்பிட்ட ஒரு ஆட்டத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. உலக கோப்பை போட்டி நெருங்கும் போது இது மாறலாம். ராகுலின் திறமையும், டாப் வரிசையில் அவர் அளித்த பங்களிப்பையும் நாங்கள் அறிவோம். அடுத்து ஐ.பி.எல். போட்டி வருகிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சில 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளோம். எனவே களம் காணும் சிறந்த லெவன் அணியை மதிப்பிடுவதற்கு போதுமான காலஅவகாசம் இருக்கிறது.

கோலி என்னுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதே அணிக்கு நல்லது என்று நினைத்தால் அதுபடியே நடக்கட்டும். ஒரு அணியாக எது சரியாகப்படுகிறதோ அதை செய்வோம்.’ என்றார்.

‘20 ஓவர் தொடரை முடித்து விட்டோம். அடுத்து வரும் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக இறங்கமாட்டார் என்று நினைக்கிறேன்’ என்றும் ரோகித் குறிப்பிட்டார்.

மோர்கன் கருத்து

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘இன்னொரு அற்புதமான ஆட்டமாக இது அமைந்தது. ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் இந்திய அணி எங்களை வீழ்த்தி விட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி. நாங்களும் இந்த தொடரில் ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறோம். இதில் இருந்து நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். ஐ.பி.எல்.-ல் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ள இங்கிலாந்து வீரர்கள் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் அனுபவம் உலக கோப்பை போட்டியில் மிகவும் கைகொடுக்கும்’ என்றார்.

அடுத்து இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் நாளை (பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
3. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.