லோகேஷ் ராகுல் சதம் வீண்: 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - 337 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து இங்கிலாந்து அசத்தல்


லோகேஷ் ராகுல் சதம் வீண்: 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - 337 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து இங்கிலாந்து அசத்தல்
x
தினத்தந்தி 27 March 2021 1:31 AM GMT (Updated: 27 March 2021 1:31 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது. லோகேஷ் ராகுலின் சதம் வீண் ஆனது.

புனே,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. இந்திய அணியில் தோள்பட்டை காயத்தால் விலகிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் காயத்தில் சிக்கிய கேப்டன் இயான் மோர்கன், சாம் பில்லிங்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் நீக்கப்பட்டு டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டன், ரீஸ் டாப்லி ஆகியோர் இடம் பெற்றனர். லிவிஸ்டனுக்கு இது அறிமுக ஒரு நாள் போட்டியாகும். நடப்பு இந்திய பயணத்தில் 9-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. தானும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாக இந்திய கேப்டன் கோலி கூறினார்.

இதன்படி ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முந்தைய ஆட்டத்தின் ஹீரோ தவான் (4 ரன்) இந்த முறை ஜொலிக்கவில்லை. டாப்லியின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற ஸ்டோக்சிடம் பிடிபட்டார். மறுமுனையில் டாப்லியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ரோகித் சர்மா (25 ரன், 25 பந்து, 5 பவுண்டரி) அடுத்த ஓவரில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் ஜோடி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். அவசரம் காட்டாமல் ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுப்பதில் கவனம் செலுத்திய இவர்கள் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். 22.1 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. 35 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த கோலி 62 பந்துகளில் தனது 62-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

நீண்ட கால சத ஏக்கத்தை இந்த தடவையாவது கோலி தணிப்பாரா? என்று ஏங்கிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோலி 66 ரன்களில் (79 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடில் ரஷித்தின் சுழலில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் கோலியின் விக்கெட்டை அடில் ரஷித் கபளீகரம் செய்வது இது 9-வது முறையாகும்.

அடுத்து ராகுலுடன், ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இதன் பிறகு தான் ஆட்டம் சூடுபிடித்தது. சிக்சர் மழையை பார்க்க முடிந்தது. பண்ட் அதிரடியில் வெளுத்து வாங்கினார். ஸ்டோக்ஸ், டாம் கர்ரனின் ஓவர்களில் சிக்சர்களை சிதறவிட்டார். இதற்கிடையே இரண்டு முறை அவருக்கு நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்க, டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தால் மறுவாழ்வு பெற்றார். 27 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்டது. ‘ரீப்ளே’யில் பந்து பேட்டில் உரசி அதன்பிறகே காலுறையில் படுவது தெரியவந்தது. அதுவும் இந்த பந்து பின்பகுதியில் பவுண்டரிக்கு ஓடியது. ஆனால் விதிமுறைப்படி ரன் இல்லாத பந்தாக (டாட் பால்) அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 40 ரன்னில் கேட்ச் என்று நடுவர் விரலை உயர்த்தினார். ரீப்ளேயில் பந்து அவரது முழங்கை மற்றும் ஹெல்மெட்டில் பட்டு அதை விக்கெட் கீப்பர் பிடிப்பது தெளிவானது.

டி.ஆர்.எஸ். பலனோடு 28 பந்துகளில் 2-வது அரைசதத்தை கடந்த பண்ட் தொடர்ந்து அதிரடி காட்டினார். இன்னொரு பக்கம் நிலைத்து நின்று அட்டகாசப்படுத்திய லோகேஷ் ராகுல் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அணியின் ஸ்கோர் 271 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 108 ரன்களில் (114 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ‘பவுன்சர்’ பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார். பாண்ட்யா-பண்ட் ஜோடி 10 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி பிரமாதப்படுத்தியது. ஸ்கோரும் 300 ரன்களை தாண்டியது. பண்ட் தனது பங்குக்கு 77 ரன்கள் (40 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். ஒரு நாள் போட்டியில் பண்டின் அதிகபட்ச ரன் இதுவாகும். கடைசி கட்டத்தில் ஸ்கோரை வெகுவாக உயர்த்திய ஹர்திக் பாண்ட்யா (35 ரன், 16 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) இறுதி ஓவரில் கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் நமது பேட்ஸ்மேன்கள் 126 ரன்கள் திரட்டினர்.

அடுத்து 337 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் இந்த தடவை தடாலடி பாணியை கைவிட்டு பக்குவமாக மட்டையை சுழட்டினர். ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டனர். மீண்டும் ஒரு முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை ரன்-அவுட்டில் தான் பிரிக்க முடிந்தது. ஸ்கோர் 110 ரன்களாக உயர்ந்த போது ஜாசன் ராய் (55 ரன், 52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் வந்தார். ஸ்டோக்ஸ்- பேர்ஸ்டோ ஜோடியும் இந்திய பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டு நொறுக்கியது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், குருணல் பாண்ட்யாவின் ஓவர்களில் சகட்டு மேனிக்கு சிக்சர்களை பறக்க விட்டனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகள சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட பேர்ஸ்டோ பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து தனது 11-வது சதத்தை பதிவு செய்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் ஆடிய விதத்தை கண்டு இந்திய வீரர்கள் தளர்ந்து போனார்கள்.

சிக்சர் வேட்டையால் வெற்றிப்பாதையை சுலபமாக்கிய பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களில் (52 பந்து, 4 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். பேர்ஸ்டோ 124 ரன்களில் (112 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார். இவர்கள் 2-வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

அடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் சர்மா (சி) ரஷித் (பி)

சாம் கர்ரன் 25

தவான் (சி) ஸ்டோக்ஸ் (பி) டாப்லி 4

விராட்கோலி (சி) பட்லர் (பி)ரஷித் 66

ராகுல் (சி) டாப்லி (பி)

டாம் கர்ரன் 108

ரிஷாப் பண்ட் (சி) ஜாசன் ராய்

(பி) டாம் கர்ரன் 77

ஹர்திக் பாண்ட்யா (சி)

ஜாசன் ராய் (பி) டாப்லி 35

குருணல் பாண்ட்யா (நாட்-அவுட்) 12

ஷர்துல் தாகூர் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 9

மொத்தம் (50 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 336

விக்கெட் வீழ்ச்சி: 1-9, 2-37, 3-158, 4-271, 5-308, 6-334.

பந்து வீச்சு விவரம்

சாம் கர்ரன் 7-0-47-1

ரீஸ் டாப்லி 8-0-50-2

டாம் கர்ரன் 10-0-83-2

பென் ஸ்டோக்ஸ் 5-0-42-0

மொயீன் அலி 10-0-47-0

அடில் ரஷித் 10-0-65-1

இங்கிலாந்து

ஜாசன் ராய் (ரன்-அவுட்) 55

பேர்ஸ்டோ (சி) கோலி (பி) பிரசித் 124

பென் ஸ்டோக்ஸ் (சி) பண்ட்

(பி) புவனேஷ்வர் 99

டேவிட் மலான் (நாட்-அவுட்) 16

ஜோஸ் பட்லர் (பி) பிரசித் 0

லிவிங்ஸ்டன் (நாட்-அவுட்) 27

எக்ஸ்டிரா 16

மொத்தம் (43.3 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 337

விக்கெட் வீழ்ச்சி: 1-110, 2-285, 3-287, 4-287.

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 10-0-63-1

பிரசித் கிருஷ்ணா 10-0-58-2

ஷர்துல் தாகூர் 7.3-0-54-0

குல்தீப் யாதவ் 10-0-84-0

குருணல் பாண்ட்யா 6-0-72-0

Next Story