கிரிக்கெட்

‘ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ கேப்டன் விராட்கோலி அதிருப்தி + "||" + 'It is surprising that Shardul Tagore was not given the man of the match award' Captain Virat Kohli dissatisfied

‘ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ கேப்டன் விராட்கோலி அதிருப்தி

‘ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ கேப்டன் விராட்கோலி அதிருப்தி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அதிருப்தி தெரிவித்தார்
புனே,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதலில் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 322 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 66 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வென்று இருந்தன. 1984-85-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்றது கிடையாது என்ற சோகம் தொடருகிறது. முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி தன்வசப்படுத்தி இருந்தது.

3-வது கேப்டன்

கடைசி ஆட்டத்தில் 8-வது வரிசையில் களம் இறங்கி 95 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்த வரிசையில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்தவரான சக நாட்டு வீரர் கிறிஸ் வோக்ஸ் (95 ரன்) சாதனையை சமன் செய்த இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 219 ரன்கள் குவித்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேட்ஸ்டோ தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த போட்டியின் மூலம் விராட்கோலி சர்வதேச கிரிக்கெட்டில் (அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து) இந்திய அணியை 200 ஆட்டங்களில் வழிநடத்திய 3-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றார். முன்னாள் கேப்டன்கள் டோனி 332 சர்வதேச ஆட்டங்களிலும், அசாருதீன் 221 சர்வதேச ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி முறையே முதல் 2 இடங்களில் உள்ளனர்.

விராட்கோலி கருத்து

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘டாப் 2’ அணிகள் மோதுகையில் போட்டி கடுமையாக தான் இருக்கும். யாரும் கடைசி வரை வெற்றிக்கான முயற்சியை எளிதில் கைவிடமாட்டார்கள். இலக்கை விரட்டுகையில் சாம் கர்ரன் உண்மையிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்திய எங்களது பவுலர்கள் அவர்கள் வெற்றி இலக்கை கடக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து நல்ல நெருக்கடி அளித்தனர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா, நடராஜன் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் நிறைய கேட்ச்களை தவற விட்டோம். அது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கேட்ச்களை தவறவிடுவதால் சில சமயங்களில் போட்டியின் முடிவில் பாதகத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்த ஆட்டத்தில் ஷர்துல் தாகூருக்கு (4 விக்கெட் மற்றும் 30 ரன்) தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. இதேபோல் புவனேஷ்வர் குமார் (மொத்தம் 6 விக்கெட்) தொடர்நாயகன் விருதுக்கு தேர்வாகாததும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எங்களது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அவர்கள் இருவரும் ஆடுகளம் பந்து வீச்சுக்கு அனுகூலமாக இல்லாவிட்டாலும் அபாரமாக செயல்பட்டனர். புவனேஷ்வர்குமார் அதிக ரன் கொடுக்காத வகையில் சிக்கனமாக பந்து வீசினார். தற்போது எங்கள் அணியின் கடைசி கட்ட பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று சதம் அடித்தால் அணியால் 370-380 ரன்களை எளிதாக தாண்ட முடியும்.

இந்த தொடரை நாங்கள் அருமையான முறையில் நிறைவு செய்து இருக்கிறோம். உலக சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு எதிராக கிடைத்த இந்த வெற்றி இனிப்பானதாகும். அடுத்து நாங்கள் ஐ.பி.எல். போட்டியை எதிர்நோக்கி இருக்கிறோம். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது என்பது மனதளவில் கடினமானதாகும். இதனை கருத்தில் கொண்டு வருங்கால போட்டிகளை முடிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

பார்ட்னர்ஷிப் அமையவில்லை

தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவிக்கையில், ‘இது ஒரு அருமையான ஆட்டமாகும். இரு அணிகளும் சில தவறுகள் இழைத்தாலும், புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சாம் கர்ரன் மிகவும் அற்புதமாக விளையாடி அணியை வெற்றியின் அருகில் அழைத்து சென்றார். அவரது ஆட்டம் பார்க்க அருமையாக இருந்தது. கடின உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போனது அவருக்கு வருத்தம் அளித்து இருக்கும். அதேநேரத்தில் அவர் வெற்றிக்காக போராடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறோம். இந்த இன்னிங்ஸ் குறித்து சாம் கர்ரன் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்) நிச்சயம் டோனியிடம் பேசுவார் என்று நினைக்கிறேன். நெருக்கடியான சூழ்நிலையில் சாம் கர்ரன் செயல்பட்ட விதம் டோனியின் ஆட்ட தாக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

தொடக்க கட்டத்தில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. இதனால் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதில் இருந்து நாங்கள் மீண்டு வந்த நிலையில் ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா கூட்டணி ரன் வேகத்தை அதிகரிக்க செய்தது. இருப்பினும் நாங்கள் இந்திய அணியை போதுமான ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தினோம். பேட்டிங்கில் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இந்த தோல்வியால் நாங்கள் அச்சம் அடையவில்லை. கடந்த சில வருடங்களாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். வெள்ளை நிற பந்து (ஒருநாள், 20 ஓவர்) போட்டிக்கு எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உருவெடுத்து வருகிறார்கள். இதனால் எங்கள் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி தொடர் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாகும்’ என்றார்.

சாம் கர்ரன்

ஆட்டநாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் நான் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் வெற்றியை அதிகம் விரும்புபவன். அதேநேரத்தில் இந்த ஆட்டம் சிறந்த அனுபவமாகும். நீண்ட காலமாக இங்கிலாந்து அணிக்கு நான் பெரிய அளவில் பங்களிக்கவில்லை. தடுத்து ஆடுவது கடினமாக இருந்ததால் பெரும்பாலான பந்துகளை நானே எதிர்கொண்டு அடித்து ஆட நினைத்து செயல்பட்டேன். கடைசி கட்டத்தில் நடராஜன் சிறப்பாக பந்து வீசினார். அவர் சிறந்த பவுலர் என்பதை கடைசி ஓவரில் நிரூபித்து காட்டினார். ஆடுகளம் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் பேட்டிங் பிரமிக்க வைப்பதாக உள்ளது. இந்த தொடர் நல்ல பாடமாகும். ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மணிரத்னம் மீது இயக்குனர் பொன்ராம் அதிருப்தி
நவரசாவில் இருந்து தன் படம் வெளியேற்றப்பட்டதற்கு மணிரத்னம் சொன்ன காரணம் திருப்திகரமாக இல்லை என இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
2. “லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி
“லஞ்ச ஒழிப்பு போலீசார், பெயரளவில்தான் செயல்படுகிறார்கள்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அதிருப்தி.