ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி - ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி - ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
x
தினத்தந்தி 10 April 2021 1:04 AM GMT (Updated: 10 April 2021 1:04 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்தது.

சென்னை, 

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று நிறைவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

ரசிகர்கள் இன்றி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரஜத் படிதர் அறிமுக வீரராக இடம் பிடித்தார். மும்பை அணியில் புதுமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் புகுந்தனர். முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் ரன்வேகத்தை துரிதப்படுத்திய சமயத்தில் ரோகித் சர்மா (19 ரன், 15 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய ரோகித் சர்மா கோலி-சாஹல் கூட்டணியால் ரன்-அவுட்டில் வீழ்த்தப்பட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் ரன்-அவுட் ஆவது இது 11-வது நிகழ்வாகும்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (31 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஷான் கிஷன் (28 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 49 ரன்னில் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) வாஷிங்டன் சுழலில் அவரிடமே சிக்கினார். ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

ஆனாலும் மும்பை வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது எளிதில் 170 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் இறுதிகட்டத்தில் பெங்களூரு பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசி முடக்கினர். வேகப்பந்து வீ்ச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய இன்னிங்சின் கடைசி ஓவரில் மட்டும் ரன்-அவுட் உள்பட 4 வீரர்கள் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். இதில் பொல்லார்ட் (7 ரன் ), குருணல் பாண்ட்யா (7 ரன்) ஆகியோரும் அடங்குவர்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பீல்டிங்கின் போது விராட் கோலி, முகமது சிராஜ் உள்பட 4 பேர் கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தனர். இல்லாவிட்டால் மும்பைக்கு இன்னும் சிக்கலாகியிருக்கும். பெங்களூரு தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

அடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேப்டன் விராட் கோலியுடன், வாஷிங்டன் சுந்தர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் வாய்ப்பு பெற்றார். 2-வது பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சுந்தர் 10 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் (8 ரன்) போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து விராட் கோலியும், கிளைன் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது (12.3 ஓவர்) விராட் கோலி (33 ரன், 29 பந்து, 4 பவுண்டரி) பும்ராவின் பந்து வீச்சில் எல்.டபிள்யூ. ஆனார். சிறிது நேரத்தில் மேஸ்வெல்லும் (39 ரன், 28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற பெங்களூரு அணிக்கு நெருக்கடி உண்டானது.

இதன் பின்னர் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அணியை நிமிர வைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் வீசினார். இதில் முதல் 3 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது. 4-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது டிவில்லியர்ஸ் (48 ரன், 27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆக, திரில்லிங் எகிறியது. இதையடுத்து 2 பந்தில் 2 ரன் தேவையானது. 5-வது பந்தில் ஒரு ரன் வந்தது. தொடர்ந்து 6-வது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன் எடுக்க பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்ஷல் பட்டேல் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

Next Story