கிரிக்கெட்

5 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்ததால் ‘வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்தேன்’ ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பேட்டி + "||" + I thought it would be hard to win Rajasthan captain Interview with Samson

5 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்ததால் ‘வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்தேன்’ ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பேட்டி

5 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்ததால் ‘வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்தேன்’ ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பேட்டி
‘டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்ததால் வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்தேன்’ என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது. இதில் டெல்லி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் டேவிட் மில்லர் (62 ரன்), கிறிஸ் மோரிஸ் (ஆட்டம் இழக்காமல் 36 ரன்) ஆகியோரின் நேர்த்தியான பேட்டிங்கால் 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன் தேவைப்பட்ட போது 19 மற்றும் 20-வது ஓவர்களில் கிறிஸ் மோரிஸ் தலா 2 சிக்சர் விரட்டி அசத்தினார்.

15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘எங்கள் அணியில் டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இருந்தாலும், 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி பெறுவது கடினம் தான் என்று நினைத்தேன். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். கடைசி கட்டத்தில், கிறிஸ் மோரிஸ் தயவு செய்து ஒரு சிக்சா் அடியுங்கள் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். முந்தைய ஆட்டத்தில் (பஞ்சாப் அணிக்கு எதிராக) இறுதி ஓவரில் ஒரு ரன்னுக்கு நான் ஓட மறுத்து கடைசி பந்தை எதிர்கொள்ள எடுத்த முடிவு சரியானது தான்.’ என்றார்.

சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 3 ஓவர்களை அற்புதமாக வீசியிருந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து இன்னொரு ஓவர் பந்து வீச வாய்ப்பு அளிக்காமல் கேப்டன் ரிஷாப் பண்ட், மார்கஸ் ஸ்டோனிசை (13-வது ஓவர்) பந்து வீச அழைத்தார். அவர் அந்த ஓவரில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அது ராஜஸ்தான் அணிக்கு உத்வேகம் மாற வழிவகுத்தது. இது குறித்து டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ட போது, ‘தொடக்க ஆட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை என்பதால் அஸ்வின் கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்தார். தனது பந்து வீச்சில் உள்ள குறைகளை திருத்தி அருமையாக செயல்பட்டார். 3 ஓவர்கள் பந்து வீசிய அவர் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்க அனுமதிக்கவில்லை. அவருக்கு 4-வது ஓவரும் பந்து வீச வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அவர் தனது 4 ஓவர் கோட்டாவை முழுமையாக பூர்த்தி செய்ய வாய்ப்பு வழங்கப்படாதது தவறு தான். இது குறித்து கேப்டன் ரிஷாப் பண்டிடம் பிறகு நான் பேசுவேன்.

கிறிஸ்மோரிஸ் எளிதாக ரன் எடுக்கும் வகையில் நாங்கள் அதிக பந்துகளை வீசிவிட்டோம். ‘யார்க்கர்’ வீசியிருந்தால் அவர் இந்த அளவுக்கு ரன் எடுத்து இருக்க முடியாது. 2-வது இன்னிங்சில் பனியின் தாக்கம் அதிகம் இருந்ததால் பவுலர்கள் பந்தை பிடித்து வீசுவது கடினமாக இருந்தது. பந்து கையில் இருந்து வழுக்கியதால் வேகப்பந்து வீச்சாளர்கள் சில ‘புல்டாஸ்’ பந்துகளை வீச வேண்டியதானது. 13-வது ஓவர் வரை எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினோம். கடைசி 4-5 ஓவர்களில் செய்த சில தவறுகள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது’ என்றார்.