‘ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி நாங்கள் செயல்படவில்லை’; பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பேட்டி


‘ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி நாங்கள் செயல்படவில்லை’; பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பேட்டி
x
தினத்தந்தி 27 April 2021 8:50 PM GMT (Updated: 27 April 2021 8:50 PM GMT)

‘ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி நாங்கள் செயல்படவில்லை’ என்று பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.

மோர்கன் கருத்து

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. முதலில் ‘பேட்’ செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்தது. 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து களத்தில் நின்றதுடன் அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘நாங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறோம். ஆனால் சீசன் தொடக்கத்தில் நாங்கள் விரும்பிய வகையில் விளையாடவில்லை. இந்த ஆட்டத்தில் எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக எங்களது பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதல் தொடர்ந்து எதிரணிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். இந்த சீசனில் ஷிவம் மாவிக்கு இது 2-வது போட்டி தான். இதேபோல் ஒரு பவுலரை தொடர்ச்சியாக 4 ஓவர்கள் பந்து வீச வைப்பதும் நாங்கள் அடிக்கடி செய்யக்கூடியதல்ல. கெய்லுக்கு எதிராக ஷிவம் மாவியின் பந்து வீச்சு ஆதிக்கம், எங்களுக்கு சாதகமாக அமைந்தது. கடந்த போட்டியிலும் ஷிவம் மாவி நன்றாக செயல்பட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள். பந்து வீச்சில் வித்தியாசம் காட்டக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். இது மற்ற அணிகளை காட்டிலும் எங்களுக்கு அனுகூலமான விஷயமாகும். சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

கொரோனாவை வெல்ல அறிவுரை

கொரோனா பரவல் தொடர்ந்து சவாலாக விளங்கி வருகிறது. வீரர்களும், ஊழியர்களும் நிறைய விஷயங்களை சமாளிக்க வேண்டியது இருக்கிறது. உயிர் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே என்ன மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகிறது என்பது எங்களுக்கு தெரியும். கொரோனாவுக்கு எதிராக எங்களது ஆதரவை அளிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனாவால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். வெளியே செல்லுகையில் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். இதுபோன்ற கடினமான நிலைமையை இங்கிலாந்திலும் நாங்கள் பார்த்து இருக்கிறோம். நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த பிரச்சினையை வெல்ல முடியும்’ என்றார்.

பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. இது எங்களுடையை மோசமான செயல்பாடாகும். புதிய ஆடுகளத்துக்கு தகுந்தபடி நாங்கள் எங்களை மாற்றி கொண்டு விளையாடி இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் நன்றாக செயல்பட்டு இருந்தால் இன்னும் 20-30 ரன்கள் சேர்த்து இருக்கலாம். ஆடுகளம் மெதுவாக இருந்தது. பந்து பவுன்ஸ் ஆகவில்லை. ஆனால் இந்த ஆடுகளத்தில் 120-130 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. எளிதாக சில விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஷாட் ஆடினால் நன்றாக இருக்கும் என்பதை முதல் 6 ஓவர்களில் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. புதிய ஆடுகளத்தில் முதலில் நீங்கள் பேட்டிங் செய்கையில் அதன் தன்மையை கணிப்பது கடினமானதாகும். ஆனால் ஆடுகளத்தின் தன்மையை விரைவில் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி செயல்பட வேண்டியது அவசியமானதாகும். ஆனால் அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. இன்னும் இங்கு நாங்கள் சில போட்டிகளில் விளையாட வேண்டியது இருக்கிறது. இந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story