இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு


இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு
x
தினத்தந்தி 1 May 2021 12:36 AM GMT (Updated: 1 May 2021 12:36 AM GMT)

இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளரும், போட்டி இயக்குனருமான தீரஜ் மல்ஹோத்ரா நேற்று தெரிவித்தார்.

துபாய்,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 9 நகரங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சில நாடுகள் விமான போக்குவரத்தை தடைசெய்திருப்பதாலும் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி, சார்ஜா) தேர்வு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளரும், போட்டி இயக்குனருமான தீரஜ் மல்ஹோத்ரா நேற்று தெரிவித்தார். ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்வது சரியாக இருக்காது. ஆனாலும் உலக கோப்பை போட்டிக்கான மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை வைத்துள்ளோம். ஒரு வேளை அமீரகத்தில் போட்டி நடந்தாலும் போட்டியை நடத்தும் உரிமம் இந்தியாவிடமே இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் உலக கோப்பை போட்டியை நடத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தற்போது கணிசமான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே உலக கோப்பை போட்டியை நடத்தும் நிலைமையில் நாங்கள் இருப்போம். போட்டிக்குரிய இடங்களை 9-ல் இருந்து 5 ஆக குறைக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 மாதங்களில் இதே நிலைமை நீடித்தால் மாற்றுதிட்டத்தை கையில் எடுப்போம்’ என்றார்.

Next Story