டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ‘10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’; பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டி


டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ‘10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’; பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டி
x
தினத்தந்தி 3 May 2021 9:55 PM GMT (Updated: 3 May 2021 9:55 PM GMT)

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.

டெல்லி அணி வெற்றி

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் குடல்வால் அழற்சியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்ட மயங்க் அகர்வால் 99 ரன்கள் (58 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 47 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியின் பொறுப்பு கேப்டன் மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ரிஷாப் பண்ட் கருத்து

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘ஷிகர் தவான், பிரித்வி ஷா ஆகியோர் எங்களுக்கு மிகவும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அவர்கள் இருவரும் இன்னிங்சை தொடங்கிய விதம் அருமையாக இருந்தது. இதனால் இந்த இன்னிங்சை பார்க்க சிறப்பாக இருந்தது. முதல் இன்னிங்சிலேயே பந்து நன்கு திரும்பியது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக கொண்ட எங்கள் அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கம் காண்பதை பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. எங்கள் அணியில் இருந்த பெரும்பாலான பிரச்சினைகளை நாங்கள் சரி செய்துவிட்டோம். அடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஆட்டங்களில் நாங்கள் சில மாற்றங்களை முயற்சித்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். எங்கள் அணிக்குள் நிலவும் போட்டி நன்றாக இருக்கிறது. எங்களிடம் நிறைய தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நான் கேப்டனாக ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வருகிறேன். எனது அனுபவத்தையும், என்னை சுற்றி இருக்கும் சீனியர் வீரர்களின் அனுபவத்தையும் பயன்படுத்தி கொள்கிறேன். அணியில் எல்லோரும் நன்றாக இருப்பதாக உணரும் வகையில் சூழ்நிலையை உருவாக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்’ என்றார்.

மயங்க் அகர்வால் சொல்வது என்ன?

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் பொறுப்பு கேப்டன் மயங்க் அகர்வால் கருத்து தெரிவிக்கையில், ‘லோகேஷ் ராகுல் அறுவை சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்று இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் நாங்கள் இந்த ஆடுகளத்தில் 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். டெல்லி அணியினர் பவர்பிளேயில் ஆடிய விதத்தை பார்க்கையில் அதில் இருந்து மீண்டு வர நாங்கள் போராட வேண்டியதாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்பது எங்களது திட்டமாகும். இந்த நாள் எனக்குரியதாக இருந்ததால் நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக மிடில் ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை. இருப்பினும் இறுதி கட்டத்தை நன்றாக நிறைவு செய்தோம். இந்த தோல்வியை மறந்து அடுத்த போட்டி குறித்து சிந்திக்க வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும். அணியின் ஏற்றம் மற்றும் இறக்கத்தை சமாளிப்பது தான் கேப்டன்ஷிப்பின் பண்பாகும். இந்த ஆட்டத்திலும், இதற்கு முந்தைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிராருக்கு பாராட்டுகள். அவர் இந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் பவுண்டரியும் அடித்தார். ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.


Next Story