கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் மைக் ஹஸ்சி விருத்திமான் சஹாவுக்கு தொடர்ந்து சிகிச்சை


கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் மைக் ஹஸ்சி விருத்திமான் சஹாவுக்கு தொடர்ந்து சிகிச்சை
x
தினத்தந்தி 14 May 2021 11:35 PM GMT (Updated: 14 May 2021 11:35 PM GMT)

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சென்னை, 

ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட அவருக்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. அடுத்து நடத்தப்பட்ட 2-வது சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை குறிக்கும் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்தது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மைக் ஹஸ்சி முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு மறுபடியும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்து இருக்கிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று கூறுகையில், ‘கொரோனா பாதிப்பில் இருந்து மைக் ஹஸ்சி நன்றாக மீண்டு விட்டார். அவர் எப்போது, எந்த வழியாக ஆஸ்திரேலியா திரும்புவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

இதே போல் ஐ.பி.எல். தொடரின் போது கொரோனா தொற்றுக்குள்ளான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனது தனிமைப்படுத்துதல் காலம் இன்னும் முடிவடையவில்லை. வழக்கமான சோதனையின் போது எடுக்கப்பட்ட 2 பரிசோதனைகளில் ஒன்றில் ‘நெகட்டிவ்’ முடிவும் (கொரோனா இல்லை), மற்றொன்றில் ‘பாசிட்டிவ்’ (கொரோனா பாதிப்பு உள்ளது) முடிவும் வந்தன. மற்றப்படி நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். முழுமையான விவரம் தெரியாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story