முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது, இந்திய பெண்கள் அணி


முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது, இந்திய பெண்கள் அணி
x
தினத்தந்தி 20 May 2021 8:24 PM GMT (Updated: 20 May 2021 8:24 PM GMT)

முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் இந்திய பெண்கள் அணி விளையாடுகிறது.

மெல்போர்ன்,

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி ஆடும் முதல் டெஸ்ட் இதுவாகும். இதைத் தொடர்ந்து இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதன்படி செப்டம்பர் 19, 22, 24-ந்தேதிகளில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதன் பின்னர் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்கிறது. இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இது பகல்-இரவு டெஸ்டாக (பிங்க் பந்து டெஸ்ட்) நடத்தப்படுகிறது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே மட்டும் ஒரே ஒரு பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. 2017-ம் ஆண்டு சிட்னியில் நடந்த அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ள இந்திய பெண்கள் அணி, இதுவரை ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வீழ்த்தியதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 9 டெஸ்டில் ஆடியிருக்கும் இந்திய அணி அதில் 4-ல் தோல்வியும், 5-ல் டிராவும் கண்டுள்ளது.

இதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய பெண்கள் கிரிக்கெட்டை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். இந்திய பெண்கள் அணி ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக பிங்க் பந்து டெஸ்டில் விளையாட இருப்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. அக்டோபர் 7, 9, 11 ஆகிய தேதிகளில் இந்த ஆட்டங்கள் நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடக்கின்றன.

Next Story