‘என்னை பவர்-பிளே பந்து வீச்சாளராக உருவாக்கியவர் டோனி’ - தீபக் சாஹர் சொல்கிறார்


‘என்னை பவர்-பிளே பந்து வீச்சாளராக உருவாக்கியவர் டோனி’ - தீபக் சாஹர் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 May 2021 9:46 PM GMT (Updated: 21 May 2021 9:46 PM GMT)

என்னை பவர்-பிளே பந்து வீச்சாளராக உருவாக்கியது டோனி தான் என்று தீபக் சாஹர் சொல்கிறார்.

மும்பை, 

இந்திய 20 ஓவர் போட்டி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவருமான 28 வயதான தீபக் சாஹர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் அது நனவாகி விட்டது. அவரது கேப்டன்ஷிப்பில் நான் நிறைய கற்று இருக்கிறேன். அவரது வழிகாட்டுதலில் எனது ஆட்டத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றுள்ளேன். பொறுப்பை எடுத்துக் கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர் கற்று தந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ‘பவர்-பிளே’க்குள் (முதல் 6 ஓவர்கள்) மூன்று ஓவர்கள் வேறு யாரும் வீசியதில்லை. அதை நான் மட்டுமே செய்திருக்கிறேன். அதற்கு காரணம் டோனி தான். ஆட்டத்தின் முதல் ஓவர் பந்து வீசுவது என்பது எளிதான பணி அல்ல. ஆனால் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக்கொண்டு முன்னேற்றம் கண்டு இருக்கிறேன். என்னை ‘பவர்-பிளே’ பந்து வீச்சாளராக உருவாக்கியது டோனி தான். ‘நீங்கள் எனது பவர்-பிளே பந்து வீச்சாளர்’ என்று எப்போதும் சொல்வார். எந்தெந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் டோனி.

இவ்வாறு சாஹர் கூறினார்.

மேலும் அவர், ‘இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவானை கேப்டனாக நியமிப்பது தான் சரியான முடிவாக இருக்கும். அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். நிறைய அனுபவம் கொண்டவர். என்னை பொறுத்தவரை சீனியர் வீரர் தான் கேப்டனாக இருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

Next Story