விராட் கோலியை விட அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர் யார்?


விராட் கோலியை விட அதிக சம்பளம் பெறும்  கிரிக்கெட் வீரர் யார்?
x
தினத்தந்தி 25 May 2021 9:01 AM GMT (Updated: 25 May 2021 9:01 AM GMT)

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் கேப்டன்களின் பட்டியலில் விராட் கோலி 2-ஆம் இடத்தில் உள்ளார்.

உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களை பட்டியலிட்டால் அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் கோலிக்கு, கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் மட்டும் இல்லாது விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.  

கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது. அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.  இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், விராட் கோலியை விட அதிக  சம்பளம் பெறுகிறார். இந்தப்பட்டியலில் விராட் கோலி, 2 ஆம் இடத்திலேயே உள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பிசிசிஐயின் ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் உள்ளார். அவருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடியை பிசிசிஐ வழங்குகிறது. அதேவேளையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட். ஆண்டுக்கு 7,00,000 பவுண்டுகளை சம்பளமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.7.22 கோடியாகும்.  

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் சம்பளமே விராட் கோலியை விட அதிகம் என்பது வியக்கும்படியாக உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.  

கடந்த 2020- ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இடம் பிடித்து இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் விராட் கோலி, அந்த அணியிடம் இருந்து  ரூ.17 கோடியை பெறுகிறார். 


Next Story