டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று உலக கோப்பை இறுதிப்போட்டி போன்றது; நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் பேட்டி


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று உலக கோப்பை இறுதிப்போட்டி போன்றது; நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் பேட்டி
x
தினத்தந்தி 30 May 2021 10:08 PM GMT (Updated: 30 May 2021 10:08 PM GMT)

முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் (ஜூன் 18-22) மோதுகின்றன.

இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரும், ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் தொடுப்பதில் கில்லாடியுமான 35 வயதான நீல் வாக்ெனர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை உலக கோப்பை இறுதிப்போட்டி போன்றே பார்க்கிறேன். நியூசிலாந்து அணிக்காக ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இதுவரை நான் விளையாடியதில்லை. அது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏமாற்றமாகும். இனி வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே இந்த போட்டி தான் எனக்கு உலக கோப்பை போன்றது. இப்போதைக்கு எனது முழு கவனமும், முயற்சிகளும் டெஸ்ட் கிரிக்கெட் மீதே உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல்முறையாக நடப்பதால் அதற்கு வரலாற்று சாதனைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இப்போது தொடங்கியிருப்பதே மிகப்பெரிய விஷயமாகும். இறுதிசுற்றில் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான இந்தியாவை சந்திக்கிறோம். முக்கியமான போட்டிகளில், சிறந்த அணிக்கு எதிராக ஆடும் போது தான் நமது திறமையை பரிசோதித்து பார்க்க முடியும். அது தான் முக்கியம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் உண்மையிலேயே என்னை பரவசப்படுத்துகிறது. ஆனால் அதை பற்றியே அதிகமாக சிந்தித்து என்னை நெருக்கடிக்குள்ளாக்க விரும்பவில்லை. இதை இன்னொரு சாதாரண டெஸ்ட் போட்டி போன்றே அணுகுவேன். ஆனாலும் இறுதிப்போட்டி நிச்சயம் எனக்கு மறக்க முடியாத தருணமாக இருக்கப்போகிறது.

இவ்வாறு வாக்ெனர் கூறினார்.


Next Story