கிரிக்கெட்

14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்பினர் + "||" + “Great To Be Home”: Australian Cricketers Exit Quarantine In Sydney

14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்பினர்

14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்பினர்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது.

இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணிகளை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேறுவழியின்றி கடந்த மாதம் 4-ந் தேதி போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விரைவாக அனுப்பி வைத்தது. இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு விமானங்கள் வர கடந்த 15-ந் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருந்தது. இதனால் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களான பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், ஜாசன் பெரென்டோர்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மோசஸ் ஹென்ரிக்ஸ் பயிற்சியாளர்கள் ரிக்கி பாண்டிங், சைமன் கேடிச், மைக் ஹஸ்சி மற்றும் போட்டி அதிகாரிகள், வர்ணனையாளர்கள் உள்பட மொத்தம் 38 ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். மாலத்தீவில் 10 நாட்கள் தங்கி இருந்த 38 ஆஸ்திரேலியர்களும் விமான தடையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்பினர். அவர்கள் அனைவரும் சிட்னியில் உள்ள ஓட்டல் அறைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வீரர்கள் உள்ளிட்ட 38 ஆஸ்திரேலியர்களின் தனிமைப்படுத்துதல் முடிவடைந்து விட்டதால் அனைவரும் நேற்று தங்களது வீட்டுக்கு திரும்பினர். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு திரும்பிய வீரர்களை அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி வரவேற்றனர். குடும்பத்தினருடன் இணைந்த குதூகலத்தை வீரர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘வீட்டில் இருப்பது மிகவும் சிறப்பானது’ என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்துதலில் இருந்து வீடு திரும்புகையில் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப் கருத்து தெரிவிக்கையில், ‘புதிய காற்றை அனுபவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்காவது ஒரு இடத்தில் சிக்கி இருப்பது என்பது எப்பொழுதும் கடினமானதாகும். வீட்டுக்கு திரும்புவது நிம்மதியை தருகிறது. வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்திக்க என்னால் காத்து இருக்க முடியவில்லை’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் 19-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி
அமீரகத்தில் விரைவில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.