இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - கான்வே சதம் விளாசி புதிய சாதனை


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - கான்வே சதம் விளாசி புதிய சாதனை
x
தினத்தந்தி 3 Jun 2021 2:38 AM GMT (Updated: 3 Jun 2021 2:38 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசிய கான்வே புதிய சாதனை படைத்தார்.

லண்டன்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதமும், அறிமுக வீரர் டிவான் கான்வேயும் களம் இறங்கினார்கள். டாம் லாதம் 23 ரன்னில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (13 ரன்) விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் காலி செய்தார். இதைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 14 ரன்னில் ராபின்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கான்வே 163 பந்துகளில் தனது முதல் சதத்தை எட்டினார். இதன் மூலம் அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசிய 12-வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி முதல்இன்னிங்சில் 86 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. டிவான் கான்வோ 136 ரன்னுடனும் (240 பந்து, 16 பவுண்டரி), ஹென்றி நிகோல்ஸ் 46 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்சில் அறிமுக டெஸ்டிலேயே அதிக ரன்கள் குவித்தவரான இந்தியாவின் சவுரவ் கங்குலியின் (131 ரன், 1996-ம் ஆண்டு) சாதனையை 29 வயதான கான்வே நேற்று முறியடித்தார். மேலும் நியூசிலாந்து வீரர்களில் வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவரான கேன் வில்லியம்சனின் (2010-ம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ெடஸ்டில் 131 ரன்) சாதனையையும் தகர்த்தார்.

Next Story