பயிற்சியாளராக இருந்த போது ஒவ்வொரு தொடரிலும் எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தேன்: டிராவிட் பேட்டி


பயிற்சியாளராக இருந்த போது ஒவ்வொரு தொடரிலும் எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தேன்: டிராவிட் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2021 11:55 PM GMT (Updated: 11 Jun 2021 11:55 PM GMT)

இந்திய ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக இருக்கையில் ஒவ்வொரு தொடரிலும் அணியில் இடம் பெற்ற எல்லா வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு அளித்தேன் என்று டிராவிட் தெரிவித்தார்.

இலங்கை தொடர்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி ஜூலை 13, 16, 18 ஆகிய தேதிகளிலும், 20 ஓவர் போட்டி 21, 23, 25 ஆகிய தேதிகளிலும் கொழும்பில் நடக்கிறது. அந்த சமயத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதால், இலங்கை தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக யார் செயல்படுவார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரும், முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றிவருமான ராகுல் டிராவிட் இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செல்வார் என்று தெரிகிறது.

டிராவிட் பேட்டி

இந்த நிலையில் ராகுல் டிராவிட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கு (ஏ அணிக்கான தொடர்) என்னோடு வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன் என்பதை வீரர்களிடம் நேரடியாகவே சொல்லி விடுவேன். ஒரு சுற்றுப்பயணத்துக்கு சென்று விட்டு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பது எனக்கு தெரியும். அதனை இளம் வயதில் நான் அனுபவித்து இருக்கிறேன்.

உள்ளூரில் ஒரு சீசனில் 700-800 ரன்கள் குவிக்கும் ஒரு வீரரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் போது தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனால் தேர்வாளர்கள் பார்வையில் அவர் அடுத்த சீசனில் ஆரம்ப நிலையில் இருந்து தான் கருத்தில் கொள்ளப்படுவார். அடுத்த சீசனிலும் நீங்கள் 800 ரன்களை குவித்தால் தான் அணி தேர்வில் பரிசீலனை செய்யப்படுவீர்கள். அதனை செய்வது என்பது எளிதான காரியமல்ல. எனவே உங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இதனால் தான் ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் அணியில் இடம் பிடிக்கும் 15 வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிப்பேன். 19 வயதுக்கு உட்பட்ட அணியை பொறுத்தமட்டில் 5-6 மாற்றங்கள் வரை செய்திருக்கிறேன்.

முழுமையான கிரிக்கெட் வீரராக...

சாலையிலோ, கடற்கரையிலோ விளையாடுவதன் மூலம் நீங்கள் முழுமையான கிரிக்கெட் வீரராக உருவெடுக்க முடியாது. கிரிக்கெட்டை விரும்புவர்கள் முறையான ஆட்டங்களிலும், பிட்ச்களிலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். சரியான பயிற்சியும், உடற்தகுதிக்கான உதவியும் அளித்தால் தான் நல்ல வீரர்களை உருவாக்க முடியும்.

எங்களுடைய காலத்தில் உடற்தகுதிக்கு போதிய வசதிகள் கிடையாது. உடற்தகுதிக்கு நாங்கள் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா வீரர்களை பார்த்து தான் தெரிந்து கொள்வோம். அவர்களுக்கு உடற்தகுதி பயிற்சியாளர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் எங்களுக்கு, உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் பயிற்சி மேற்கொள்ளாதே, அது உடலை இறுக்கி விடும் என்று சொல்லப்பட்டது. பவுலிங் மற்றும் ஓடுவதில் தான் நாங்கள் அதிகம் ஈடுபட்டோம்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.


Next Story