இங்கிலாந்து மண்ணில் சாதிக்க பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டியது என்ன? அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹாேனே யோசனை


இங்கிலாந்து மண்ணில் சாதிக்க பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டியது என்ன? அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹாேனே யோசனை
x
தினத்தந்தி 13 Jun 2021 11:37 PM GMT (Updated: 13 Jun 2021 11:37 PM GMT)

இங்கிலாந்து மண்ணில் சாதிக்க பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும் என அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹாேனே கூறினர்.

சவுத்தம்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடக்கிறது. இதையொட்டி பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர் புஜாரா அளித்த ஒரு பேட்டியில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியினர் இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்டில் விளையாடி உள்ளனர். இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் இறுதிப்போட்டி என்று வரும் போது நாங்கள் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். நன்றாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்குரிய திறமை எங்கள் அணியிடம் இருப்பதை அறிவோம். அதனால் மற்ற விஷயங்கள் பற்றி கவலையில்லை. தற்போது எங்களுக்குள் அணி பிரித்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி எங்களை தயார்படுத்தி வருகிறோம்.

இங்கிலாந்து மண்ணில் ஒரே நாளில் வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் விளையாடுவது ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் சவாலாக இருக்கும். அதாவது மழை குறுக்கிட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு திடீரென மழை நின்றதும் களம் காணுகையில், இந்த இடைவெளியில் மறுபடியும் பேட் செய்யும் போது நீங்கள் சூழலை சரியாக புரிந்து கொண்டு விளையாட வேண்டியது அவசியம். மனரீதியாக வலுவாக இருக்க வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும்’ என்றார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கூறுகையில், ‘இங்கிலாந்தில் உள்ள கடினமான சீதோஷ்ண நிலையில் உற்சாகமாக பேட்டிங் செய்ய வேண்டும். நிலைத்து நின்று விட்டால் அதன் பிறகு பேட்டிங் செய்வதற்கு உகந்த இடமாக இங்கிலாந்து இருக்கும். ஒரு பேட்ஸ்மேனாக இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், நேர்பகுதியில் நீங்கள் அதிகமான ஷாட்டுகளை அடிக்க வேண்டும். உடலை நெருக்கமாக கொண்டு வந்து பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். இதே போல் இங்கு சில சமயம் 70, 80 ரன்கள் எடுத்தால் கூட அழுத்தமாக காலூன்ற முடியாது என்பதையும் உணர்ந்துள்ளேன்.

கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்ேபாட்டிக்கு வந்திருக்கிறோம். இது முக்கியமான போட்டி தான். ஆனால் ஒரு அணியாக இதை வழக்கமான இன்னொரு ஆட்டமாக பாவித்து ஆடுவோம். தனிப்பட்ட முறையில் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுவது பரவசமூட்டுகிறது’ என்றார்.

Next Story