கடைசி நாளில் அதிரடி திருப்பம்: உலக டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ‘சாம்பியன்’ - இந்திய அணியை சுருட்டியது


கடைசி நாளில் அதிரடி திருப்பம்: உலக டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ‘சாம்பியன்’ - இந்திய அணியை சுருட்டியது
x
தினத்தந்தி 24 Jun 2021 1:34 AM GMT (Updated: 24 Jun 2021 1:34 AM GMT)

சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நாளில் நியூசிலாந்து பவுலர்கள் மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினர்.

சவுத்தம்டன்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ரன்களும் எடுத்தன.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (8 ரன்), புஜாரா (12 ரன்) களத்தில் இருந்தனர். மழை மற்றும் மோசமான வானிலையால் ஏறக்குறைய 2½ நாள் ஆட்டம் பாதிப்புக்குள்ளானதால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6-வது நாளுக்கு போட்டி நகர்ந்தது. என்றாலும் இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடியப்போகிறது என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் கடைசி நாளில் நியூசிலாந்தின் மாயாஜால பந்து வீச்சால் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிபோய்விட்டது.

மாற்றுநாளும், கடைசி நாளுமான நேற்று இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. மழை அறிகுறியே தென்படாத அளவுக்கு வெயிலும் கொளுத்தியது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்தனர். குறிப்பாக உயரமான பவுலர் கைல் ஜாமிசனின் பந்து வீச்சு அச்சுறுத்தும் வகையில் அமைந்தது. பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆனதால் கோலியும், புஜாராவும் தடுமாறினர். அவர்கள் இருவருக்கும் ஜாமிசன் ‘செக்’ வைத்தார். ஆப்-ஸ்டம்புக்கு வெளியே சற்று எழும்பி சென்ற பந்தை தள்ளிவிட முயன்ற கோலி (13 ரன், 29 பந்து) விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். முதல் இன்னிங்சிலும் இதே ஜாமிசனின் வேகத்தில் கோலி வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் புஜாராவுக்கும் (15 ரன்) பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு செல்ல, அதை ஸ்லிப்பில் நின்ற டெய்லர் பிடித்தார். அடுத்து இறங்கிய அதிரடி வீரர் ரிஷாப் பண்டும் சீக்கிரமாக பெவிலியன் திரும்பி இருக்க வேண்டியது. 5 ரன்னில் இருந்த போது ஜாமிசனின் பந்து வீச்சில் அவர் ஸ்லிப்பில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை டிம் சவுதி தவற விட்டார். இல்லாவிட்டால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரிஷாப் பண்ட், அணியை ஓரளவு நெருக்கடியில் இருந்து காப்பாற்றினார். மறுமுனையில் துணை கேப்டன் ரஹானே (15 ரன் ), ரவீந்திர ஜடேஜா (16 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

அதன் பிறகு ரிஷாப் பண்டை தான் அணி மலைபோல் நம்பி இருந்த நிலையில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில், அவசரகதியில் ஒரு ஷாட்டை அடித்து கேட்ச் ஆகிப்போனார். பண்ட் 41 ரன்கள் (88 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். அதே ஓவரில் அஸ்வினும் (7 ரன்) சிக்கினார். அத்துடன் முழுைமயாக சரண் அடைந்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 73 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், கைல் ஜாமிசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் ஒருவர் கூட 50 ரன்னை தொடவில்லை. 2018-ம் ஆண்டு லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டுக்கு பிறகு ஒரு டெஸ்டில் இந்திய அணியில் யாரும் அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைவான ஸ்கோர் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினாலும் அதன் பிறகு அனுபவம் வாய்ந்த கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் பொறுமையாக ஆடி வெற்றிப்பாதைக்கு பயணிக்க வைத்தனர். பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு எடுபடாதது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் வசப்படுத்தியது. கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களுடனும் (89 பந்து, 8 பவுண்டரி), ராஸ் டெய்லர் 47ரன்னுடனும் (100 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து அணி உலக அளவிலான போட்டியில் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி நீண்டகால ஏக்கத்தை தணித்துள்ளது.

2-வது இன்னிங்சில் மட்டும் இந்திய அணி கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்திருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்து கோப்பையை பகிர்ந்திருக்கலாம். அவ்வாறு தான் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை நமது நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெறுப்பேற்றிவிட்டனர்.

வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 217 ரன்

நியூசிலாந்து 249 ரன்

2-வது இன்னிங்ஸ்

இந்தியா

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ

(பி) சவுதி 30

சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ

(பி) சவுதி 8

புஜாரா (சி) டெய்லர் (பி)

ஜாமிசன் 15

விராட் கோலி (சி) வாட்லிங்

(பி) ஜாமிசன் 13

ரஹானே (சி) வாட்லிங் (பி)

பவுல்ட் 15

ரிஷாப் பண்ட் (சி) நிகோல்ஸ்

(பி) பவுல்ட் 41

ஜடேஜா (சி) வாட்லிங்

(பி) வாக்னெ்ா 16

அஸ்வின் (சி) டெய்லர் (பி)

பவுல்ட் 7

முகமது ஷமி (சி) லாதம் (பி)

சவுதி 13

இஷாந்த் ஷர்மா (நாட்-அவுட்) 1

பும்ரா (சி) லாதம் (பி) சவுதி 0

எக்ஸ்டிரா 11

மொத்தம் (73 ஓவர்களில்

ஆல்-அவுட்) 170

விக்கெட் வீழ்ச்சி: 1-24, 2-51, 3-71, 4-72, 5-109, 6-142, 7-156, 8-156, 9-170.

பந்து வீச்சு விவரம்

டிம் சவுதி 19-4-48-4

டிரென்ட் பவுல்ட் 15-2-39-3

ஜாமிசன் 24-10-30-2

வாக்னெர் 15-2-44-1

நியூசிலாந்து

டாம் லாதம் (ஸ்டம்பிங்) பண்ட்

(பி) அஸ்வின் 9

கான்வே எல்.பி.டபிள்யூ (பி)

அஸ்வின் 19

வில்லியம்சன் (நாட்-அவுட்) 52

ராஸ் டெய்லர் (நாட்-அவுட்) 47

எக்ஸ்டிரா 13

மொத்தம் (45.5 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 140

விக்கெட் வீழ்ச்சி: 1-33, 2-44.

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 6.2-2-21-0

முகமது ஷமி 10.5-3-31-0

ஜஸ்பிரித் பும்ரா 10.4-2-35-0

அஸ்வின் 10-5-17-2

ஜடேஜா 8-1-25-0

Next Story