கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறையை மீறிய இலங்கை வீரர்கள் இடைநீக்கம்


கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறையை மீறிய இலங்கை வீரர்கள் இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:48 AM GMT (Updated: 29 Jun 2021 1:48 AM GMT)

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறையை மீறிய 3 வீரர்களையும் இலங்கை கிரிக்கெட் வாரிய செயற்குழு அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

கொழும்பு,

குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் போட்டி தொடரில் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லி ஸ்டிரிட்டில் இன்று நடக்கிறது. இதற்கிடையே, இலங்கை அணி வீரர்கள் குசல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளைய (பயோ-பபிள்) விதிமுறையை மீறி டர்ஹாம் நகர வீதியில் நேற்று முன்தினம் இரவு சுற்றித் திரிந்துள்ளனர். 

இதனை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்த இலங்கை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறையை மீறிய 3 வீரர்களையும் இலங்கை கிரிக்கெட் வாரிய செயற்குழு அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அத்துடன் அவர்கள் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

Next Story