பொல்லார்டு அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்


பொல்லார்டு அதிரடி:  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 2 July 2021 3:34 AM GMT (Updated: 2021-07-02T09:04:12+05:30)

வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

செயிண்ட் ஜார்ஜ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  2-டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட 20- ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3-ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி 2 வெற்றியும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியும் பெற்றிருந்த நிலையில், 4-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி,  முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸ் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். ருத்ர தாண்டவம் ஆடிய பொல்லார்டு 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 168-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரும் 2-2 என்று சமன் நிலை பெற்றுள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் வரும் நாளை(3ஆம் தேதி) நடைபெறுகிறது. 

Next Story