சர்வதேச பெண்கள் கிரிக்கெட்: 2 வீராங்கனைகள் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


சர்வதேச பெண்கள் கிரிக்கெட்: 2 வீராங்கனைகள் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 July 2021 12:05 AM GMT (Updated: 2021-07-04T05:35:28+05:30)

சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் 2 வீராங்கனைகள் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்டிகுவா, 

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 2-வது ஆட்டம் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது. மழை குறுக்கீடுக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெஸ்ட்இண்டீஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியின் போது பீல்டிங் செய்கையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை சினெல் ஹென்றி திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அணி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்தை விட்டு வெளியில் தூக்கி சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த அணியின் மற்றொரு வீராங்கனையான செடின் நேஷன் மயக்கம் அடைந்து மைதானத்தில் சரிந்தார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு இரண்டு மாற்று வீராங்கனைகள் களம் இறக்கப்பட்டு போட்டி தொடர்ந்து நடந்தது. மயங்கி விழுந்த இரு வீராங்கனைகளும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இருவரும் சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் மயங்கி விழுந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Next Story