இலங்கை-இந்தியா கிரிக்கெட் தொடர் அட்டவணையில் மாற்றம் முதலாவது ஒரு நாள் போட்டி 17-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


இலங்கை-இந்தியா கிரிக்கெட் தொடர் அட்டவணையில் மாற்றம் முதலாவது ஒரு நாள் போட்டி 17-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 10 July 2021 1:49 AM GMT (Updated: 10 July 2021 1:49 AM GMT)

இலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான தொடர் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, 

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய தொடருக்காக நேற்று கொரோனா தடுப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்களது தனிமைப்படுத்துதலை மேலும் 2 நாட்கள் அதிகரித்து அதற்கு பிறகு மேலும் ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்கு தகுந்தபடி கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதனால் கொழும்பில் வருகிற 13-ந் தேதி தொடங்க இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17-ந்தேதி நடக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21-ந் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.

போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து இருக்கிறது. இது குறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 13-ந் தேதிக்கு பதிலாக 17-ந் தேதி தொடங்கும். வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் பிரிஸ்டலில் முடிந்த இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடருக்கு பிறகு கொரோனா பரிசோதனை செய்ததில் இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Next Story