கிரிக்கெட்

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிமுறையில் மாற்றம் - ஐ.சி.சி. அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + 2nd World Test Championship points change - ICC Official announcement

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிமுறையில் மாற்றம் - ஐ.சி.சி. அதிகாரபூர்வ அறிவிப்பு

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிமுறையில் மாற்றம் - ஐ.சி.சி. அதிகாரபூர்வ அறிவிப்பு
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புள்ளிமுறையில் மாற்றம் செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
துபாய்,

முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது. 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

முதலாவது சாம்பியன்ஷிப்பில் ஒரு டெஸ்ட் தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்பட்டது. அதாவது 2 டெஸ்ட் தொடராக இருந்தால் டெஸ்ட் வெற்றிக்்கு 60 புள்ளி, 3 போட்டி கொண்டதாக இருந்தால் வெற்றிக்கு 40 புள்ளி, 5 போட்டி கொண்ட தொடர் என்றால் வெற்றிக்கு 24 புள்ளி வீதம் அளிக்கப்பட்டது. பிறகு கொரோனா பரவலால் நிறைய தொடர்களை நடத்த முடியாமல் போனதால் புள்ளிமுறையில் மாற்றம் செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெற்றிக்குரிய புள்ளியை சதவீதம் அடிப்படையில் கணக்கிட்டு டாப்-2 அணிகளை முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிமுறையில் மாற்றங்களை செய்யப்போவதாக ஐ.சி.சி. ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதன்படி டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளி, ‘டிரா’வுக்கு 4 புள்ளி, ‘டை’க்கு 6 புள்ளி என்று வழங்கப்படும் என்று ஐ.சி.சி. நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. புள்ளிகள் எவ்வளவு பெற்றாலும் வெற்றி புள்ளிக்குரிய சதவீதம் அடிப்படையிலேயே அணிகளின் வரிசை தீர்மானிக்கப்படும்.

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளும் 2021-2023-ம் ஆண்டு கால கட்டத்தில் தலா 6 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் 3 தொடர் உள்ளூரிலும், 3 தொடர் வெளியூரிலும் நடைபெறும். ஆனால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அணிக்கும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 22 டெஸ்டில் விளையாடுகிறது. குறைந்தபட்சமாக வங்காளதேச அணி 12 டெஸ்டில் ஆடுகிறது.

மொத்தம் 19 டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி உள்ளூரில் நியூசிலாந்து (2 டெஸ்ட்), இலங்கை (3 டெஸ்ட்), ஆஸ்திரேலியா (4 டெஸ்ட்) ஆகிய அணிகளுடன் மோதுகிறது. வெளியூரில் இங்கிலாந்து (5 டெஸ்ட்), தென்ஆப்பிரிக்கா (3 டெஸ்ட்), வங்காளதேசம் (2 டெஸ்ட்) ஆகிய அணிகளை சந்திக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணியின் மற்ற தொடர்களுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.