கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து + "||" + Women's 20 over cricket: England won the series against India

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது
செம்ஸ்போர்டு,

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா (0) முதல் ஓவரிலேயே போல்டு ஆனார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 6 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 51 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டும், கேத்தரின் புருன்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை டாமி பீமோன்ட் 11 ரன்னிலும், நாட் சிவெர் 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். சிறப்பாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த டானி வியாட் 89 ரன்னும் (56 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஹீதர் நைட் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து வீராங்கனைகள் டானி வியாட் ஆட்டநாயகி விருதையும், நாட் சிவெர் தொடர் நாயகி விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் போட்டி தொடரையும் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தி இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் உள்ளூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள், 20 ஓவர் தொடரையும் இந்திய பெண்கள் அணி இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்து செம்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது.