கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டம் மழையால் ரத்து + "||" + DNPL The opening match of 20-over cricket was canceled due to rain

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டம் மழையால் ரத்து

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டம் மழையால் ரத்து
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டம் மழையால் ரத்தானது.
சென்னை, 
  
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு தொடங்கியது. ரசிகர்கள் இன்றி அரங்கேறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

அடுத்த மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சேலம் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ 33 ரன்னில் (20 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து கவினுடன் இணைந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி அமர்க்களப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக நின்ற கவின் 33 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷாருக்கான் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அணியின் ஸ்கோர் 162 ரன்னாக உயர்ந்த போது சாய் சுதர்சன் (87 ரன்கள், 43 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) பெரியசாமி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 18 ஓவர்களில் கோவை அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மைதானத்தில் நிலவிய ஈரப்பதத்தை உலர வைக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காததால் இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.