கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது + "||" + The 2nd match of the Indian team is going on today in an attempt to win the one day series against Sri Lanka

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று கொழும்பில் நடக்கிறது.
கொழும்பு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று இருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கையை 262 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. இலங்கை அணியில் யாரும் அரைசதத்தை எட்டவில்லை. அதிகபட்சமாக சமிகா கருணாரத்னே 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குருணல் பாண்ட்யா ஆகியோர் விக்கெட் வீழ்த்தியதுடன், ரன் விட்டுக்கொடுப்பதிலும் சிக்கனத்தை காட்டினர். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 2 விக்கெட்டும், நீண்ட இடைவெளிக்கு பிறகு பந்து வீசிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். மூத்த வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான புவனேஷவர்குமார் 63 ரன்களை வாரி வழங்கியதுடன் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் கடைசி வரை நிலைத்து நின்று 86 ரன்கள் (95 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்தார். அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 43 ரன்னும் (24 பந்து, 9 பவுண்டரி), ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக களம் கண்ட இஷான் கிஷன் 59 ரன்னும் (42 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 31 ரன்னும் (20 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) எடுத்தனர்.

முந்தைய ஆட்டத்தை போல் இதிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களம் காணுகிறது. அதேநேரத்தில் தொடக்க தோல்வியை மறந்து சரிவில் இருந்து மீண்டு தொடரை இழக்காமல் இருக்க இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: பிரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் அல்லது நவ்தீப் சைனி, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, பானுகா ராஜபக்சே, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, இசுரு உதனா அல்லது லஹிரு குமரா, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சன்டகன்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.