பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் ராகுல் சதம் அடித்தார்


பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் ராகுல் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 20 July 2021 10:48 PM GMT (Updated: 20 July 2021 10:48 PM GMT)

கவுண்டி செலக்ட் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் ராகுல் சதம் அடித்தார். வீரர்கள் பற்றாக்குறையால் எதிரணிக்காக வாஷிங்டன், அவேஷ்கான் ஆடிய வினோதமும் நடந்தது.

செஸ்டர்-லீ- ஸ்டிரிட்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி இந்தியா- கவுண்டி செலக்ட் லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று தொடங்கியது. லேசான காயத்தால் அவதிப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை கவனித்தார். இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் டாப் வரிசை வீரர்களான ரோகித் சர்மா (9 ரன்), மயங்க் அகர்வால் (28 ரன்), புஜாரா (21 ரன்), ஹனுமா விஹாரி (24 ரன்) ஏமாற்றம் அளித்தனர். மிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று அணியை தூக்கி நிறுத்தினார். சதம் அடித்த லோகேஷ் ராகுல் 101 ரன் (150 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் அடுத்தவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா தனது பங்குக்கு 75 ரன்கள் விளாசினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 306 ரன்கள் சேர்த்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு மற்றும் காயம் காரணமாக கவுண்டி லெவன் அணியில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய வலை பயிற்சி பவுலர் அவேஷ் கானும், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் கவுண்டி அணிக்காக களம் காண இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இந்திய பேட்ஸ்மேன்களை எதிர்த்து 9.5 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாத அவேஷ்கான் விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலக நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தருக்கு கவுண்டி அணியின் கேப்டன் வில் ரோட்ஸ் பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை.

Next Story