ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 : 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 : 10  ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி
x
தினத்தந்தி 6 Aug 2021 9:37 PM GMT (Updated: 2021-08-07T03:07:08+05:30)

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

டாக்கா,

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளையும் வங்காளதேசம் வென்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மக்மதுல்லா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட், ஹேசில்வுட், சாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. 

இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரைக் கைப்பற்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது மக்மதுல்லாவுக்கு அளிக்கப்பட்டது. வங்காளதேசம் அணி,  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.


Next Story