இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்:இந்திய அணி சிறப்பான தொடக்கம் லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தல்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்:இந்திய அணி சிறப்பான தொடக்கம் லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2021 3:29 AM GMT (Updated: 2021-08-13T08:59:52+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அருமையான தொடக்கம் கண்டுள்ளது. லோகேஷ் ராகுல் சதம் அடித்தார்.

லண்டன், 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் வெளியே உட்கார வைக்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் 3 மாற்றமாக டேன் லாரன்ஸ், ஜாக் கிராவ்லி, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு பதிலாக ஹசீப் ஹமீத், மொயீன் அலி, மார்க் வுட் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வானிலையை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய கேப்டன் விராட் கோலியும் முதலில் பவுலிங்கையே விரும்பியதாக கூறினார்.

அதன் பிறகு லேசான மழை பெய்ததால் அரைமணி நேரம் தாமதமாக இந்த டெஸ்ட் தொடங்கியது. லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை பந்து வீச்சுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தீவிரத்துடன் இங்கிலாந்து பவுலர்கள் தாக்குதலை தொடுத்தனர். பந்து ஓரளவு ‘ஸ்விங்’கும் ஆனது.

இதனால் ரோகித்- ராகுல் ஜோடியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடினர். ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதை பெரும்பாலும் தவிர்த்தனர். முதல் 10 ஓவர்களில் 11 ரன்களே எடுத்தனர். 13-வது ஓவரில் தான் முதல் பவுண்டரியே ஓடியது.

தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு மட்டையை வேகமாக சுழட்டிய ரோகித் சர்மா, சாம் கர்ரனின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். மார்க்வுட் ஓவரில் பந்தை சிக்சருக்கு தெறிக்கவிட்டு அசத்தினார். மறுமுனையில் ராகுல் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். இதற்கிடையே, ஸ்கோர் 46 ரன்களில் இருந்த போது மழையால் ஆட்டம் 25 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்த ரோகித்-ராகுல் கூட்டணி ஸ்கோர் 126 ரன்களை (43.4 ஓவர்) எட்டிய போது உடைந்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் (145 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார். பந்து அவரது தொடையில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. அடுத்து வந்த புஜாரா (9 ரன், 23 பந்து) ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார்.

இதன் பின்னர் லோகேஷ் ராகுலுடன், கேப்டன் விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் வலுவூட்டினர். ஆடுகளத்தன்மை போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைத்ததால் தடுமாற்றமின்றி ரன்களை திரட்டினர்.

அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 6-வது சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் வினோ மன்கட் (1952-ம் ஆண்டு), ரவிசாஸ்திரி (1990-ம் ஆண்டு) ஆகியோருக்கு பிறகு லண்டன் லார்ட்சில் சதம் விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

ஸ்கோர் 267 ரன்களை எட்டிய போது விராட் கோலி(42 ரன்) கேட்ச் ஆனார். 87 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது லோகேஷ் ராகுல் 124 ரன்களுடனும் ( 242 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

Next Story