டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 15 Aug 2021 2:47 AM GMT (Updated: 15 Aug 2021 2:47 AM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடக்கும் சாம்பியன் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 19-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருச்சி வாரியர்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி லீக் சுற்றில் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்தது. அதன் பிறகு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திருச்சி வாரியர்சிடம் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 2-வது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டி சாதனை படைத்திருக்கிறது.

3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (246 ரன்), கேப்டன் கவுசிக் காந்தி (182 ரன்), ராதாகிருஷ்ணன் (153 ரன்), சசிதேவ், (151 ரன்) ஆர்.சதீஷ் (130 ரன்) உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கிஷோர் (11 விக்கெட்), சித்தார்த் (10 விக்கெட்) ஆகியோரைத் தான் அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் சுழலில் மிரட்டிய சாய் கிஷோர் 3 முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி திண்டுக்கல் அணியை 103 ரன்னில் முடக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.

லீக்கிலும், முதலாவது தகுதி சுற்றிலும் திருச்சி வாரியர்சிடம் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. ஏற்கனவே பல இறுதிசுற்றுகளில் விளையாடி இருக்கும் கில்லீஸ் அணியினருக்கு இது போன்ற பெரிய போட்டிகளில் நெருக்கடியை எப்படி கையாள வேண்டும் என்ற அனுபவம் உண்டு. இது அவர்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

லீக் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த திருச்சி வாரியர்ஸ் அணி, முதலாவது தகுதி சுற்றில் கில்லீசுக்கு எதிராக 154 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் நிதிஷ் ராஜகோபால் (280 ரன்), ஆதித்யா கணேஷ் (239 ரன்), பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் சரவணகுமார் (13 விக்கெட்), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மதிவண்ணன் (11 விக்கெட்) ஆகியோர் திருச்சி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். நடப்பு தொடரில் கில்லீசை இரண்டு முறை தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

திருச்சி கேப்டன் ரஹில் ஷா கூறுகையில், ‘இது இறுதிப்போட்டி என்பதால் உற்சாகமாக உள்ளேன். ஆனாலும் இன்னும் எங்கள் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. இதை மற்றொரு சாதாரணமான ஆட்டமாக எடுத்துக்கொண்டு விளையாடி எங்களது 120 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம்’ என்றார்.

மொத்தத்தில் இரு அணி வீரர்களும் நீயா-நானா? என்று வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ்குமார், சோனு யாதவ், சாய் கிஷோர், சித்தார்த், பி.அருண், அலெக்சாண்டர்

திருச்சி வாரியர்ஸ்: சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அட்னன் கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், சரவணகுமார், மதிவண்ணன், பொய்யாமொழி, ரஹில் ஷா (கேப்டன்), சுனில் சாம்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story