20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 24-ந்தேதி மோதல்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 24-ந்தேதி மோதல்
x
தினத்தந்தி 18 Aug 2021 3:01 AM GMT (Updated: 18 Aug 2021 3:01 AM GMT)

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந்தேதி துபாயில் மோதுகின்றன.

துபாய்,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் வேறு வழியின்றி இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (துபாய், அபுதாபி, சார்ஜா) மாற்றப்பட்டது.

அங்கு அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கும் இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

இதன்படி தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடுகிறது. மீதமுள்ள 4 அணிகள் முதலாவது சுற்றில் இருந்து தேர்வாகும்.

இந்தியா-பாகிஸ்தான்

சூப்பர்-12 சுற்றில் தலா 6 அணிகள் வீதம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

குரூப் 2-ல் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் இடம் பெறுகின்றன. கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 24-ந்தேதி துபாயில் அரங்கேறுகிறது. எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு எந்த வித நேரடி கிரிக்கெட் போட்டிக்கும் வாய்ப்பில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது. இதனால் ஐ.சி.சி. நடத்தும் பெரிய போட்டிகளில் மட்டும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. அதில் இந்தியா வெற்றி கண்டிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கோதாவில் குதிப்பதால் இப்போதே ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

நவம்பர் 10-ந்தேதி, 11-ந்தேதிகளில் அரைஇறுதியும், நவம்பர் 14-ந்தேதி துபாயில் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது. இந்த மூன்று ஆட்டங்களுக்கு மாற்று நாளும் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக முதல் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கின்றன. 8 அணிகள் களம் இறங்கும் இதில் ‘ஏ ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமிபியா, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறும்.

பாபர் அசாம் உற்சாகம்

உலக கோப்பை குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், ‘பாகிஸ்தானை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் அது எங்களது சொந்த ஊர் போட்டி போன்று இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக எங்களது பெரும்பாலான உள்ளூர் ஆட்டங்கள் இங்கு தான் நடக்கின்றன. அமீரகத்தில் எங்களது ஆட்டத்திறனை மட்டும் மேம்படுத்திக்கொள்ளவில்லை. இங்குள்ள சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு உலகின் முன்னணி அணிகளை தோற்கடித்து 20 ஓவர் போட்டி தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டியிருக்கிறோம். இதனால் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். பழக்கப்பட்ட இங்குள்ள சீதோஷ்ண நிலையில் இத்தகைய குறுகிய வடிவலான கிரிக்கெட்டில் எங்களது திறமையை நிரூபிப்பதற்கும் உச்சபட்சசிறந்த ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்துவதற்கும் இது அருமையான வாய்ப்பாகும்’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை போட்டி மிகச்சிறப்பாக அமையப்போகிறது. உலகம் முழுவதும் 20 ஓவர் கிரிக்கெட்டின் தரம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் உலக சாம்பியன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. நெருக்கமும், சவால் மிக்கதாகவும் கொண்ட உலக கோப்பை தொடர்களில் ஒன்றாக இது இருக்கும். போட்டி எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார்.

Next Story