“முகமது சிராஜ் திறமையான பந்துவீச்சாளர்” - கேப்டன் விராட் கோலி நம்பிக்கை


“முகமது சிராஜ் திறமையான பந்துவீச்சாளர்” - கேப்டன் விராட் கோலி நம்பிக்கை
x
தினத்தந்தி 24 Aug 2021 5:05 PM GMT (Updated: 24 Aug 2021 5:05 PM GMT)

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

லண்டன், 

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் தேதி துவங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் குறித்து அவர் கூறியதாவது;-

“சிராஜ் எப்போதும் திறனுள்ள பந்துவீச்சாளர். அவரை நன்கு தெரியும் என்பதால் அவரது வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. அவருடையத் திறனை ஆதரிக்க நம்பிக்கை வேண்டும். ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. எந்தவொரு நிலையிலிலும் எந்தவொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கை அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அவர் செய்வதன் பலன்களைப் பார்க்கலாம்.

அவரிடம் எப்போதுமே திறன் உள்ளது. நம்பிக்கையும், செயல்படுத்தும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இதுமாதிரியான பந்துவீச்சாளராகத்தான் இருக்கப்போகிறார். எவ்வித அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முனைப்பு காட்டுவார். அவர் பின்வாங்கப்போவதில்லை.” 

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

Next Story