கொல்கத்தா அணியில் கம்மின்சுக்கு பதிலாக டிம் சவுதி ஒப்பந்தம்


கொல்கத்தா அணியில் கம்மின்சுக்கு பதிலாக டிம் சவுதி ஒப்பந்தம்
x
தினத்தந்தி 26 Aug 2021 10:57 PM GMT (Updated: 26 Aug 2021 10:57 PM GMT)

கொல்கத்தா அணியில் கம்மின்சுக்கு பதிலாக டிம் சவுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா, 

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கிறது. சில அணியினர் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐ.பி.எல்.போட்டியில் விளையாடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். ரூ.15½ கோடி ஊதியம் பெறும் கம்மின்ஸ் முதல் 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட் வீழ்த்தியதுடன், ஒரு அரைசதம் உள்பட 93 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அவருக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 83 ஆட்டங்களில் விளையாடி 99 விக்கெட்டுகள் கைப்பற்றியவரான 32 வயதான டிம் சவுதி ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, பெங்களூரு அணிகளுக்காகவும் ஆடியுள்ளார்.

Next Story