‘ஸ்ரேயாஸ் அய்யரின் வருகை மிகப்பெரிய பலம்’ - டெல்லி உதவி பயிற்சியாளர் முகமது கைப் பேட்டி


‘ஸ்ரேயாஸ் அய்யரின் வருகை மிகப்பெரிய பலம்’ - டெல்லி உதவி பயிற்சியாளர் முகமது கைப் பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2021 8:46 PM GMT (Updated: 15 Sep 2021 8:46 PM GMT)

ஸ்ரேயாஸ் அய்யரின் வருகை மிகப்பெரிய பலம் என டெல்லி உதவி பயிற்சியாளர் முகமது கைப் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

துபாய்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் உள்ளது. அமீரகத்தில் தொடங்கும் இரண்டாவது பகுதி ஐ.பி.எல்.-ல் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை 22-ந்தேதி துபாயில் எதிர்கொள்கிறது. இதையொட்டி டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் முகமது கைப் அளித்த பேட்டியில், ‘முதல் பாதி ஐ.பி.எல். முடிந்து மிகப்பெரிய இடைவெளி விழுந்து விட்டது.

அதிர்ஷ்டவசமாக எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். சரியான கலவையில் எங்கள் அணி அமைந்துள்ளது. 2-வது கட்ட ஐ.பி.எல். தொடரை நாங்கள் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும். 

இதில் முதல் ஆட்டம் எங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. ஏனெனில் முதல் ஆட்டத்தில் எங்களது செயல்பாடு தான், அணிக்குரிய உத்வேகத்தை நிர்ணயிப்பதாக அமையும். இந்தியாவில் நாங்கள் நன்றாக விளையாடினோம். அந்த சிறப்பான செயல்பாட்டை இப்போது அமீரகத்துக்கும் கொண்டு வர வேண்டும். 

இரு நாட்டு சீதோஷ்ண நிலையில் வித்தியாசம் இருப்பதால், ஐ.பி.எல். முதல் பாதி ஆட்டத்துடன் ஒப்பிடும் போது சில வீரர்களின் பங்களிப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம். தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் அய்யர் அணியுடன் இணைந்துள்ளார். அவரது வருகை எங்களுக்கு மிகப்பெரிய பலமாகும். ஸ்ரேயாஸ் அய்யர் அற்புதமான வீரர். கடந்த இரு சீசன்களில் எங்களுக்காக சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த சீசனிலும் அவர் களம் இறங்குவதை எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

Next Story