சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் கிட்ஸ் அணி ‘சாம்பியன்’


சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் கிட்ஸ் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 16 Sep 2021 8:07 PM GMT (Updated: 16 Sep 2021 8:07 PM GMT)

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை சொந்தமாக்கியது.

செயின்ட் கிட்ஸ்,

கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் செயின்ட் கிட்சில் நடந்த இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ்-செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் தலா 43 ரன் எடுத்தனர். 

தொடர்ந்து ஆடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்து முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை சொந்தமாக்கியது. கிறிஸ் கெய்ல் (0), இவின் லீவிஸ் (6 ரன்), கேப்டன் வெய்ன் பிராவோ (8 ரன்) சொதப்பினாலும், இளம் வீரர் டோமினிக் டிராக்ஸ் இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடி கதாநாயகனாக ஜொலித்ததுடன் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இலக்கை கடக்கவைத்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் களம் கண்ட 37 வயது வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டரான வெய்ன்பிராவோ பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் இது அவரது 500-வது 20 ஓவர் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த வகையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் பொல்லார்ட் 561 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார். அத்துடன் சி.பி.எல். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணியில் அதிகமுறை (5 தடவை) இடம் பிடித்தவர், அதிக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கேப்டன் (4 முறை) போன்ற சிறப்புகளையும் பிராவோ பெற்றார்.

Next Story