ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம் - ஐதராபாத்தை வீழ்த்தியும் பலன் இல்லை


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம் - ஐதராபாத்தை வீழ்த்தியும் பலன் இல்லை
x
தினத்தந்தி 9 Oct 2021 1:07 AM GMT (Updated: 9 Oct 2021 1:07 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 235 குவித்து வெற்றி பெற்றும் பலன் இல்லை. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. ஐதராபாத் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், துணை கேப்டன் புவனேஷ்வர்குமார் ஆகியோர் சிறிய காயங்களால் அவதிப்படுவதால் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் மனிஷ் பாண்டே முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இமாலய வித்தியாசத்தில் அதாவது குறைந்தது 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன்ரேட்டில் கொல்கத்தாவை முந்தி ‘பிளே-ஆப்’ வாய்ப்பை பெற முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் ரோகித் சர்மாவும், இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

ரன்மழை பொழிந்த இஷான் கிஷன், ஐதராபாத் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். சித்தார்த் கவுலின் ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி சாத்தினார். அடுத்து ஜாசன் ஹோல்டரின் ஓவரிலும் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டார். ருத்ரதாண்டவமாடிய அவர் 4-வது ஓவருக்குள் 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். மறுமுனையில் ரோகித் சர்மா 18 ரன்களில் (13 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை 83 ரன்கள் திரட்டி அசத்தியது. ‘மெகா ரன்’ என்ற வெறியுடன் ஆடிய மும்பை பேட்ஸ்மேன்கள் எந்த பவுலரையும் விட்டுவைக்கவில்லை. முழுக்க முழுக்க அதிரடியிலேயே கவனம் செலுத்தினர். 7.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. 2-வது விக்கெட்டுக்கு வந்த ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் வெளியேற்றப்பட்டார். இஷான் கிஷன் தனது பங்குக்கு 84 ரன்கள் (32 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் அதிவேக பவுலர் உம்ரான் மாலிக்கின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் பிடிபட்டார்.

ஆனாலும் மும்பையின் தடாலடியான ரன்வேட்டை குறையவில்லை. பிற்பாதியில் ரன்குவிப்பு பணியை கையில் எடுத்த சூர்யகுமார் அதை கச்சிதமாக செய்து முடித்தார். அவரது சரவெடியால் அந்த அணி 16.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. 2-வது கட்ட அமீரக சீசனில் 200 ரன்களை தாண்டிய முதல் அணி மும்பை தான். 19-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி துரத்திய சூர்யகுமாருக்கு, அதே ஓவரில் ஒரு பந்து தலையை பதம் பார்த்தது. பேட்டில் உரசியபடி சீறிய பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. பிசியோதெரபிஸ்ட் சோதித்த பிறகு தொடர்ந்து பேட் செய்வதாக கூறிய அவர் 2 பந்து மீதம் இருந்த போது கேட்ச் ஆனார். 82 ரன்களில் (40 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்பிய சூர்யகுமாருக்கு ஐ.பி.எல்.-ல் இது அதிகபட்சமாக அமைந்தது.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. முன்னதாக பொல்லார்ட் 13 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் ரன் ஏதுமின்றியும், குருணல் பாண்ட்யா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் சேர்த்த அணி என்ற சிறப்பையும் மும்பை பெற்றது. இதற்கு முன்பு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 6 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

அடுத்து 236 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. அந்த அணியை 65 ரன்னுக்குள் மடக்கினால் மட்டுமே ‘பிளே-ஆப்’ வாய்ப்பு கிட்டும் என்ற நிலையில் மும்பை பந்துவீச்சு தாக்குதலை தொடுத்தது. ஆனால் ஐதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் (34 ரன்), அபிஷேக் ஷர்மா (33 ரன்) ஜோடியே மும்பையின் கனவை தகர்த்தது.

சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 193 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 69 ரன்கள் (41 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

மும்பை, கொல்கத்தா அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட் அடிப்படையில் முந்திய கொல்கத்தா 4-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டியது. மும்பை அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டது. 5 முறை சாம்பியனான மும்பை லீக் சுற்றுடன் மூட்டையை கட்டுவது இது 5-வது நிகழ்வாகும்.

16 பந்தில் அரைசதம் அடித்த இஷான் கிஷன்

* இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் இஷான் கிஷன் 16 பந்துகளில் அரைசதம் நொறுக்கினார். ஐ.பி.எல். வரலாற்றில் 3-வது அதிவேக அரைசதம் இதுவாகும். பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் 2018-ம் ஆண்டு டெல்லிக்கு எதிராக 14 பந்தில் 50 ரன்களை கடந்ததே மின்னல்வேக அரைசதமாகும். யூசுப்பதான், சுனில் நரின் இருவரும் கொல்கத்தா அணிக்காக தலா 15 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக இஷான் கிஷன், சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் 16 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய சாதனையை பகிர்ந்துள்ளார்.

* மும்பை அணி முதல் 10 ஓவர்களில் 131 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த பஞ்சாப் அணியின் சாதனையை (2014-ம் ஆண்டில் ஐதராபாத்துக்கு எதிராக 131 ரன்) மும்பை சமன் செய்தது.

* இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் முகமது நபி 5 கேட்ச் செய்தார். ஐ.பி.எல்.-ல் ஒரு இன்னிங்சில் 5 கேட்ச் செய்த முதல் பீல்டர் என்ற சாதனையை முகமது நபி படைத்தார்.

* 235 ரன்கள் குவித்த மும்பைக்கு இதுவே மிகச்சிறந்த ஸ்கோராகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 223 ரன்கள் எடுத்ததே மும்பையின் அதிகபட்சமாக இருந்தது.

Next Story