வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு-கொல்கத்தா இன்று மோதல்


வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு-கொல்கத்தா இன்று மோதல்
x
தினத்தந்தி 10 Oct 2021 11:18 PM GMT (Updated: 10 Oct 2021 11:18 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்றிரவு மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை எட்டிப்பிடித்தது. 2-வது கட்ட சீசனில் மேக்ஸ்வெல் (6 அரைசதத்துடன் 498 ரன்), விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தின் (7 ஆட்டத்தில் 182 ரன்) சிறப்பான பேட்டிங் பெங்களூரு அணிக்கு கைகொடுத்தது. கேப்டன் விராட் கோலியை பொறுத்தவரை அவ்வப்போது நன்றாக ஆடுகிறார். கேப்டனாக அவர் விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடர் இதுதான். இதுவரை பெங்களூரு அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. அந்த கனவு நனவாக இன்னும் 3 வெற்றி தேவை. ஆனால் முதல் தடையை கடப்பதே கடும் சவாலாக இருக்கப்போகிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (30 விக்கெட்) கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். இன்னும் 3 விக்கெட் எடுத்தால், ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை முறியடித்து விடுவார். இதே போல் யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இளம் சூறாவளிகள்
பெங்களூருக்கு நிகராக மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் அபாயகரமான அணி தான். லீக் சுற்று முடிவில் 7 வெற்றி, 7 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணியில் கேப்டன் மோர்கன் (கடைசி 7 ஆட்டத்தில் 32 ரன் மட்டுமே) தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் கணிசமாக ரன் குவித்துள்ளனர். குறிப்பாக திரிபாதி (377 ரன்), சுப்மான் கில் (352 ரன்), நிதிஷ் ராணா ( 347 ரன்), வெங்கடேஷ் அய்யர்(7 ஆட்டத்தில் 239 ரன்) ஆகிய இளம் சூறாவளிகள் அந்த அணிக்கு ‘பிளே-ஆப்’ வாய்ப்பை தேடித் தந்துள்ளனர்.

பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி நல்ல நிலையில் உள்ளனர். பீல்டிங்கின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சில ஆட்டங்களில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் முக்கியமான இந்த ஆட்டத்தில் களம் திரும்ப வாய்ப்பு உள்ளது.

சார்ஜா எப்படி?

இவ்விரு அணிகளும் லீக்கில் சந்தித்த 2 ஆட்டங்களில் ஒன்றில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவும், மற்றொன்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இதில் கொல்கத்தாவிடம் சரண் அடைந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெறும் 92 ரன்னில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

போட்டி நடக்கும் சார்ஜா, மந்தமான வேகம் குறைந்த ஆடுகளமாகும். இங்கு ரன் சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப விளையாடுவது முக்கியம். நடப்பு தொடரில் குறைவான ஸ்கோர் இதே சார்ஜாவில் தான் (ராஜஸ்தான் 85 ரன்) பதிவாகியிருக்கிறது.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கொல்கத்தா: சுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல்-ஹசன் அல்லது ரஸ்செல், சுனில் நரின், லோக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story