கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் ஆடம் ஜம்பா, வார்னர் முன்னேற்றம் + "||" + Adam Zamba, Warner improve in 20-over cricket rankings

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் ஆடம் ஜம்பா, வார்னர் முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் ஆடம் ஜம்பா, வார்னர் முன்னேற்றம்
20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் மாற்றமில்லை.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். நியூசிலாந்தின் டிவான் கான்வே 3 இடங்கள் ஏற்றம் கண்டு 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 5-ல் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கினார். மற்ற இந்திய வீரர்கள் விராட் கோலி 8-வது இடத்திலும், ரோகித் சர்மா 16-வது இடத்திலும் உள்ளனர். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடர்நாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 8 இடங்கள் எகிறி 33-வது இடத்தையும், ஆட்டநாயகனாக தேர்வான மிட்செல் மார்ஷ் 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 இடங்கள் அதிகரித்து 32-வது இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஹசரங்கா (இலங்கை) முதலிடமும், தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா) 2-வது இ டமும் வகிக்கிறார்கள். உலக கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 13 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 5-ல் இருந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளார். டாப்-10 இடங்களில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பெறவில்லை.