ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது, தோல்வியால் பயப்பட வேண்டாம் - ரவி சாஸ்திரி


ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது, தோல்வியால் பயப்பட வேண்டாம் - ரவி சாஸ்திரி
x
தினத்தந்தி 25 Jan 2022 8:34 AM GMT (Updated: 2022-01-25T14:04:37+05:30)

இந்திய அணிக்கு இது ஒரு தற்காலிக கால கட்டமே என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மஸ்கட்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், ஒருநாள் தொடரின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது, பலம் குறைந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் அடைந்த தோல்வி குறித்து பயப்பட வேண்டாம். இந்திய அணிக்கு இது ஒரு தற்காலிக கால கட்டமே. இந்த சறுக்கலில் இருந்து இந்திய அணி எதிர்நீச்சல் போட்டு மீண்டு வரும்.

ஒரு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இழந்துவிட்டால் குற்றம்சாட்ட தொடங்கிவிடுவார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது, வெற்றியும் தோல்வியும் கலந்தே வரும்.

இந்திய அணியின் தரம் இன்னும் குறைந்துவிட்டது என்பதை நான் நம்பமாட்டேன்.திடிரென்று அவ்வளவு சீக்கிரத்தில் அணியின் தரம் குறையுமா? இந்திய கிரிக்கெட் அணி 5 வருடங்களாக நம்பர் ஒன் அணியாக வலம் வந்தது.

5 வருடங்களாக வெற்றி பெறும் விகிதம் 65 சதவீதமாக உள்ள போது ஏன் கவலைப்பட வேண்டும்? எதிரணியினர் தான் கவலையடைய நேரிடும்.

கோலியின் கேப்டன்சி துறப்பு குறித்த முடிவுக்கு மதிப்பளித்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். சச்சின், கவஸ்கர், டோனி வரிசையில் இப்போது கோலி உள்ளார்.

கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. அதனால் அதை பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் கமிஷனராக உள்ளார் ரவி சாஸ்திரி. அதனை முடித்துக்கொண்டு வர்ணனையாளராக பணியை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story