2-வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி


2-வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
x

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் கடந்த 7-ம் தேதி இலங்கை - ஆஸ்திரேலியா இடையே முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிட்சர்ட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் பின்ச் 24 ரன்னிலும், வார்னர் 21 ரன்னிலும் வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மேத்திவ் ஒய்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.


Next Story